உலகளாவிய ரீதியில் நீதிவேண்டி உரிமை வேண்டித் தமிழர் நடாத்தும் கறுப்பு யூலை நினைவின் மாபெரும் ஒன்றுகூடல் கனடா அல்பர்ட் கம்பல் சதுர்க்கத்தில் நடைபெறவுள்ளது.
இடம்: Albert Campbell Square (Scarborough Civic Center)
காலம்: யூலை 23, 2017 ஞாயிற்றுக்கிழமை
நேரம்: மாலை 6:00 மணி
1983 யூலை மாதத்தில் பல்லாயிரக்கணக்கான அப்பாவித் தமிழரை கொன்று குவித்து ஆரம்பமான தமிழினப்படுகொலை இன்று 34 ஆண்டுகள் கடந்தும் தொடர்கின்றது. தனது பொறுப்பில் இருந்து தொடர்ந்தும் தவறி நிற்கும் சர்வதேசத்தை அதன் மனிதநேயக் கடமைகளை ஆற்ற வைக்க நாம் தொடர்ந்தும் கடுமையாக உழைக்க வேண்டும்.
இலங்கை சுதந்திரம் அடைந்ததிலிருந்து காலங்காலமாக ஆட்சிக்கு வந்த சிங்கள ஆட்சியாளர்கள் தமிழர் நிலங்களை அபகரிப்பதில் மிகவும் மும்மரமாகச் செயற்பட்டார்கள். அதன் உச்சக்கட்ட நடவடிக்கையே தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் தமிழர் நில அபகரிப்பு என்பதனைப் பார்க்கக் கூடியதாகவுள்ளது. முள்ளிவாய்க்கால் பேரவலத்தை ஏற்படுத்தியவர்கள் தொடர்ந்து தமது இலக்காக தமிழர் மண்ணைப் பறிக்கும் முயற்சியில் இறங்கியிருப்பது ஒன்றும் புதிய விடயமில்லையெனினும் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் நில அபகரிப்பின் தீவிரம் மிகுந்த அச்சத்தைத் தருவதாக அமைகின்றது. அதனால் அவர்களின் அம்முயற்சியை முறியடிப்பது புலம்பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர்களின் முக்கிய கடமை மட்டுமன்றித் தேசியக் கடமையுமாகும்.
யூலை 83இல் படுகொலை செய்யப்பட்ட எம்முறவுகளை நினைவுகூர்வதுடன் போர்க்குற்றங்கள் குறித்துச் சிறீலங்கா மீது சுயாதீனமான சர்வதேச விசாரணை ஏற்படுத்தப்பட்டிருக்கும் இந்நேரத்தில் அதற்குரிய ஆதரவை முற்றுமுழுதாக வழங்குவதுடன் போர்க்கைதிகள் அனைவரும் உடனடியாக சர்வதேசக் கண்காணிப்பில் கொண்டுவரப்பட வேண்டும், போர்க்கைதிகள் நிபந்தனையின்றி விடுவிக்கப்படவேண்டும். மனித உரிமைகளை சிறீலங்கா மதிக்கும் வரைஇ இராஐதந்திர பொருளாதாரத் தடைகளை விதிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து மாபெரும் ஓன்றுகூடல் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து அதியுச்ச வேகத்தில் முடுக்கிவிடப்பட்டுள்ள இனப்படுகொலையிலிருந்து எம் உறவுகளைக் காப்பாற்ற ஐநா மேற்பார்வையில் ஒரு இடைக்கால தன்னாட்சி அலகு நிறுவப்பட வேண்டும். இதன் மூலம் கொடிய சிங்கள இராணுவத்தின் மேலாதிக்கத்தை முடிவிற்கு கொண்டுவரவேண்டும். எமது மக்களுக்கு நிரந்தரமான தீர்வாக ஐநா மேற்பார்வையில் ஒரு வாக்கெடுப்பை நடத்தி எமது சுயநிர்ணய உரிமையை நிலைநாட்டுவதற்காக ‘கருத்து கணிப்பு 2020’ என்ற நடவடிக்கையை ஆரம்பித்துள்ளோம். கொசவோ, கிழக்குத் திமோர், தெற்கு சூடான் போன்ற நாடுகள் இப்படியாகத்தான் தமது சுதந்திரத்தை பெற்றுக்கொண்டன.
இவ்வேலைத்திட்டங்கள் கைகூடிவரும்போது எமது மக்கள் அடிமை விலங்குகளை உடைத்தெறிந்து சுதந்திரக்காற்றைச் சுவாசிக்கும் நாள் வெகுதூரத்திலில்லை.
மேலதிக தொடர்புகளுக்கு: கனடியத் தமிழர் தேசிய அவை
தொலைபேசி: 416-830-7703 : மின்னஞ்சல்: Info@ncctcanada.ca
முகநூல்: @ncctonline