கனடா, அமெரிக்கா, மெக்சிக்கோ இடையேயான NAFTA எனப்படும் வட அமெரிக்க தடையற்ற வர்த்தக உடன்படிக்கை தொடர்பில், கனேடியர்களின் நிலைப்பாடு என்ன என்பதனை ஆராய்ந்து முடிவுகளை மேற்கொள்வதற்காக கனேடிய மத்திய அரசாங்கம் விஷேட திட்டமொன்றை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளது.
குறிப்பாக இந்த பொதுமக்கள் கருத்தறியும் நடவடிக்கைகளில், பேச்சுவார்த்தையில் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டிய விடயங்கள், இந்த உடன்படிக்கையில் உள்ள எவ்வாறான விடயங்களை தொடர்ந்தும் பேண வேண்டும்?, எவ்வாறான விடயங்கள் மேம்படுத்தப்பட வேண்டும்?, எவ்வாறான புதிய விவகாரங்களுக்கு தீர்வு காணப்பட வேண்டும்?, எவ்வாறான விவகாரங்கள் தற்போதய காலத்திற்கேற்ப நவீனமயப்படுத்தப்பட வேண்டும்? உள்ளிட்ட விபரங்களை பொதுமக்கள் இணையம் ஊடாக தெரிவிக்க முடியும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
இதனை விடவும், கனேடியர்களின் கருத்துக்களை அறிந்து கொள்வதற்காக, நகரமன்ற கூட்டங்களைப் போன்ற மேலும் சில கூட்டங்களை நடாத்துவதற்கும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
குறித்த 23ஆண்டுகால தடையற்ற வர்த்தக உடன்படிக்கை குறித்த முதற்கட்ட பேச்சுக்கள் எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்தின் நடுப்பகுதியில் ஆரம்பமாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.