கட்டார் தேசிய செய்தி ஊடகம் (QNA) ஹக் செய்யப்பட்ட விவகாரத்தில் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு தொடர்பு இருப்பதாக கட்டார் உள்துறை அமைச்சின் தொழில்நுட்பப் பிரிவின் தலைவர் அதிகாரி அலி மொஹமட் அல்- மொஹன்னாடி குற்றம்சாட்டியுள்ளார்.
கட்டார் தலைநகர் டோஹாவில் நேற்று (வியாழக்கிழமை) ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்படி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ‘கடந்த மே மாதம் 24 ஆம் திகதி கட்டார் செய்தி ஊடகம் ஹக் செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில் தொழில்நுட்ப வல்லுநர்களால் சேகரிக்கப்பட்ட சான்றுகளின் அடிப்படையில் இரண்டு ஐ.பி. முகவரிகள் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தை அடிப்படையாக கொண்டவை’ என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ஊடகத்தை ஹக் செய்த நபர் அதிகாரிகளின் ஆதரவுடன் பாதுகாப்பு தரத்தை கொண்டவர் என்றும் தொழில்முறையானவர் என்றும் குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமின்றி கடந்த ஏப்ரல் மாதம் முதலே ஹக் செய்த நபர் கண்காணித்து வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.