யாழ்ப்பாணம் வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலையில் மாணவிகள் மைதானத்தில் நின்றிருந்த வேளையில் வானிலிருந்து விழுந்த ஒருவகை திரவம்பட்டு 18 மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்ட மாணவிகள் உடனடியாக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மதிய நேர இடையேவளையின்போது மாணவர்கள் இன்று (வெள்ளிக்கிழமை) மைதானத்தில் நின்றிருந்த போதே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது, மஞ்சள் நிற திரவமொன்று வானிலிருந்து வீழ்ந்ததாக பாடசாலை மாணவிகள் குறிப்பிட்டனர்.
குறித்த திரவம் மாணவிகளின் உடலில்பட்ட நிலையில் அவர்களது கைகள் சிவந்துள்ளன. அதனை தொடர்ந்து பாடசாலைக்கு வந்த சுகாதார வைத்திய அதிகாரி மாணவர்களை பார்வையிட்டதுடன், உடனடியாக அவர்களை வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு பணித்துள்ளார். இந்நிலையில், அவர்கள் அனைவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.