வடக்கு மாகாண சபையில் எழுந்துள்ள பிரச்சினைகள் உள்ளிட்ட சகல விடயங்கள் தொடர்பாகவும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவரும் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனுக்கும் வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையில், கொழும்பில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற சந்திப்பில் இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. எதிர்க்கட்சித் தலைவரும் வடக்கு முதல்வரும் இணைந்து கூட்டாக வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கட்சித் தலைவர்களின் சந்திப்பு வரை, வடக்கு மாகாணசபையில் முன்மொழியப்பட்ட பிரேரணைகள் உட்பட சபையில் எழும் ஏனைய முரண்பாடுகள் தொடர்பான கருமங்கள் யாவற்றையும் பிற்போடப்படுவதெனவும் முடிவுசெய்யப்பட்டுள்ளது.