பிரிட்டிஷ் கொலம்பிய காட்டுத்தீயினால் பாதிக்கபட்ட மக்களுக்கு உதவ 100 மில்லியன் டொலர்கள் போதுமானது என புதிய ஜனநாயக கட்சி அரசின் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் மைக் ஃபான்வோர்த் தெரிவித்துள்ளார்.
தீவிரமாக பரவிவரும் காட்டுத்தீ காரணமாக இதுவரை சுமார் 43,000 மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். அத்தோடு நிலைமையினை கருத்திற்கொண்டு அவசரகால நிலைமையினை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் காட்டுத்தீயினால் பாதிக்கபட்ட மக்களுக்கு பிரிட்டிஷ் கொலம்பிய மாநில அதிகாரிகள் உதவிகளை செய்துவருகின்றனர். இது குறித்து அமைச்சர் மைக் ஃபான்வோர்த் கூறுகையில்,
“முன்னைய லிபரல் அரசினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நூறு மில்லியன் டொலர்கள் நிதி தற்போது ஏற்பட்டுள்ள செலவுகளை ஈடுசெய்ய போதுமானதாக உள்ளது. எதிர்காலத்தில் மேலதிக நிதி தேவைப்பட்டால், அதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள மாநில அரசாங்கம் தயாராக உள்ளது. காட்டுத்தீ தொடர்பிலான மத்திய அரசின் அதிகாரிகள் இந்த வாரத்தில் தமது மாநில அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளனர்.
இதேவேளை தற்போது திணைக்களங்களாலும், மத்திய பொலிஸ்துறை, சுகாதார பிரிவு, இராணுவம் உள்ளிட்ட ஏனைய அமைப்புக்களாலும் வழங்கபட்டுவரும் உதவிகளுக்கு மேலதிகமாக, வேறு என்ன தேவைகள் இருக்கின்றன என்பதை கண்டறிய, மத்திய அரசின் அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் செல்லவுள்ளனர்” என கூறினார்.