யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனை இலக்கு வைத்து துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டவரின் நண்பர்கள் இருவா் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளா் தெரிவித்துள்ளாா்.
யாழ். நல்லூர் பகுதியில் நீதிபதி இளஞ்செழியனின் வாகனத்தை நோக்கி நேற்று (சனிக்கிழமை) மாலை நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில், நீதிபதியின் மெய்ப்பாதுகாவலர் இருவர் படுகாயமடைந்தனர். இவர்கள் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர்களில் ஒருவர் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் நேற்று மாலை முதல் யாழ். நகரப்பகுதி உள்ளிட்ட பல பகுதிகளில் விசேட அதிரடிப்படையினர் களத்தில் இறக்கப்பட்டு தீவிர தேடுதல் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் சந்தேக நபா்கள் இருவா் கைது செய்யப்பட்டுள்ளனா்.
சம்பவம் இடம்பெறுவதற்கு சில மணித்தியாலங்களுக்கு முன்னதாக தாக்குதல்தாரியுடன் இணைந்து இவா்கள் இருவரும் மது அருந்தியதாக கிடைத்த தகவல்களின் அடிப்படையிலே இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
எனினும் இது குறித்து யாழ்.மாவட்ட பொலிஸார் உத்தியோகபூர்வமாக எவ்வித தகவல்களையும் வெளியிடவில்லை.