யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டினை கண்டித்து நாளை(திங்கட்கிழமை) பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக வட மாகாண தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளனர்.
யாழ். நல்லூர் பகுதியில் நீதிபதி இளஞ்செழியனின் வாகனத்தை நோக்கி நேற்று (சனிக்கிழமை) மாலை நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில், நீதிபதியின் மெய்ப்பாதுகாவலர் இருவர் படுகாயமடைந்தனர். இவர்கள் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர்களில் ஒருவர் இன்று அதிகாலை உயிரிழந்தார்.
இந்த விடயம் தொடர்பில் வட இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில், இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
”நீதிபதி மா.இளஞ்செழியன் மீதான துப்பாக்கிப் பிரயோகமானது மிலேச்சத்தனமான செயற்பாடாகும். நல்லாட்சி அரசாங்கத்தில் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறுவதனை நாம் கண்டிக்கின்றோம்.
நீதித்துறைக்கே இந்த நாட்டில் பாதுகாப்பு இல்லையாயின் சாதாரண பொதுமக்களின் நிலை என்ன என்பதனை சிந்திக்க தலைப்பட்டுள்ளோம்.
நீதிபதி மீதான தாக்குதலானது இலங்கை நீதித்துறைக்கு விடுக்கப்பட்டுள்ள பாரிய அச்சுறுத்தலாகும் என்பதனால் அதனை கண்டித்து நாளை வட இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்களாகிய நாம் பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்தாது பணி பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளோம்.
இதன்போது வடக்கில் உள்ள சமூகம் சார் அமைப்புகள் மற்றும் சமூக அக்கறை கொண்ட சங்கங்கள் அனைத்தையும் எம்முடன் இணைந்து அன்றைய தினத்தில் ஒத்துழைப்பு வழங்குமாறு கோருகின்றோம்” என குறிப்பிட்டுள்ளனர்.