முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைவழக்கில் தொடர்ந்தும் 25 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள பேரறிவாளன் விரைவில் பிணையில் விடுவிக்கப்படுவார் எனக் கூறப்படுகின்றது.
பேரறிவாளனின் பிணை குறித்து தமிழக அரசின் தலைமை வழக்கறிஞரிடம் தாம் ஆலோசனைக் கேட்டிருப்பதாகவும் அவரின் கருத்தைப் பெற்றதன் பின்னர் இது தொடர்பில் முடிவு எடுக்கப்படும் என முதல்வர் கே. பழனிசாமி அண்மையில் நடைபெற்ற பேரவைக் கூட்டத்தின் போது தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், பேரறிவாளனின் பிணை தொடர்பில் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் ஆய்வுகளை மேற்கொண்டு வருவதாகவும், பிணையில் பேரறிவாளனை விடுவிப்பதன் ஊடாக சட்ட சிக்கல்கள் ஏற்படாத பட்சத்தில் பிணை குறித்து நடவடிக்கை எடுக்க அரசு தயாராக உள்ளது என தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இதேவேளை, பேரறிவாளன் தனக்கு பிணை வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையினை கடந்த வருடம் முன்வைத்திருந்தார்.
மேலும், தமிழக முதல்வர் கே.பழனிசாமி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மு.க ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களைச் சத்தித்து பேரறிவாளனுக்கு பரோல் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையினை அவரது தாயார் அற்புதம் அம்மாள் மனு மூலமாக கோரிக்கை விடுத்திருந்தமை சுட்டிக்காட்டப்படத்தக்கது.