யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் மீதான துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தினைக் கண்டித்தும், நீதியான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் வலியுறுத்தி வட.மாகாண சட்டத்தரணிகள் நாளை (திங்கட்கிழமை) பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர்.
யாழ். நீதிமன்ற வளாகத்தில் இன்றையதினம் வடமாகாண சட்டத்தரணிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்தே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வட.மாகாண சட்டத்தரணிகள் சங்கத்தின் உபதலைவி சாந்தா அபிமன்னசிங்கம் குறிப்பிடுகையில்,
“2004 ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்ட சரத் அம்பிலிபிட்டியவின் கொலைச் சம்பவத்தின் பின்னர் இந்த சம்பவத்தினை மிகச் சவாலாக கருதுகின்றோம்.
மிக விரைவில் விசாரணைகளை முன்னெடுத்து குற்றவாளியை சட்டத்தின் முன்கொண்டு வர வேண்டுமென்றும் அனைத்து மட்டங்களிலும் நீதிபதிகளுக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமென்று வலியுறுத்தி நாளைய தினம் வடமாகாண சட்டத்தரணிகள் பணிப்பகிஷ்கரிப்பினை முன்னெடுக்கவுள்ளனர். இதனால் பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களுக்கு மனம் வருந்துகின்றோம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.