மனித உரிமைகள் விவகாரம் தொடர்பாக தாம் சிறிலங்காவுக்குத் தொடர்ந்து அழுத்தங்களைக் கொடுக்கப் போவதாக, பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் போல் ஸ்கல்லி தெரிவித்துள்ளார்.
தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழுவின் புதிய தலைவராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள அவர், சிறிலங்காவின் மனித உரிமைகள் தொடர்பான கரிசனைகள் இன்னமும் நீடிப்பதாகவும், அனைத்துலக அளவில் இந்த விவகாரத்தை தாம் தொடர்ந்து எழுப்பவுள்ளதாகவும் கூறியுள்ளார்.
‘பிரித்தானியாவில் உள்ள தமிழ்ச் சமூகத்தின் நலன்களுக்கு நான் ஆதரவு அளிப்பேன். அதேவேளை, தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழு பிரித்தானிய நாடாளுமன்றத்திலும், பிரசெல்சிலும், ஜெனிவாவிலும், தொடர்ந்து இந்த விவகாரத்தை எழுப்பும்.
சிறிலங்காவில் செயல்முறைகள் மெதுவாகவே இடம்பெறுவதாகவும், மனிதஉரிமை கரிசனைகள் தொடர்வதாகவும், ஐ.நா மனித உரிமைகள் பேரவை ஏற்றுக் கொண்டுள்ளது.’ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.