எளிமையான குடும்பப் பின்னணியில் இருந்து வந்த எனக்கு அளிக்கப்பட்டுள்ள ஜனாதிபதிப் பதவியினை பணிவுடன் ஏற்றுக் கொள்கின்றேன் என இந்தியாவின் புதிய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் இந்தியாவின் 14ஆவது ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர், நாடாளுமன்றத்தில் முதன்முறையாக உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும், இந்தியாவை முன்னேற்றமடையச் செய்யவேண்டிய தருணம் இது எனக் குறிப்பிட்ட கோவிந்த், முன்னேற்றம் எனப்படுவது நாட்டின் கடைக்கோடி வரை சென்றடைய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
முன்னேற்றத்திற்கு ஒருமைப்பாடு மிக அவசியம் எனச் சுட்டிக்காட்டிய ராம்நாத் கோவிந்த், நாட்டின் மக்களையே தனக்கு இருக்கும் பலமாக கருதுகிறேன் எனக் கூறியுள்ளார்.
இதேவேளை, இந்தியாவின் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை எண்ணி தான் பெருமைப்படுவதாக குறிப்பிட்ட ஜனாதிபதி அனைத்துத் துறைகளிலும் வல்லமைப் பெற்ற நாடாக இந்தியாவை மாற்றுவது முக்கிய பணி எனவும் மேலும் தெரிவித்துள்ளார்.