ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத கறுப்புப் பட்டியலில் இருந்து, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு நீக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் உச்ச நீதிமன்றத்தால் இன்று (புதன்கிழமை) இத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. எனினும், ஹமாஸ் அமைப்பின் மீதான தடை, தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2009ஆம் ஆண்டு உள்நாட்டு யுத்தம் நிறைவடைந்த பின்னர், விடுதலைப் புலிகளால் தாக்குதல் நடத்தப்பட்டதாக எவ்வித சாட்சியும் பதிவாகவில்லையென தெரிவித்த நீதிமன்றம் இத் தீர்ப்பை வழங்கியுள்ளது.
பயங்கரவாத அமைப்புக்களின் பட்டியலில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு சேர்த்துக்கொள்ளப்பட்ட முறைமை தவறென லக்ஸம்பேர்க்கில் அமைந்துள்ள ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் ஏற்கனவே தெரிவித்திருந்தது.
உள்நாட்டு யுத்தத்தில் ஈடுபட்ட ஒரு அமைப்பை சர்வதேச சட்டங்களின் மூலம் ஒரு பயங்கரவாத அமைப்பாக வறையறுக்க முடியாதென நீதிமன்றில் வாதாடப்பட்டு வந்தது. இந்நிலையில், புலிகள் அமைப்பை சேர்த்துக்கொண்ட விதத்தை ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் ரத்து செய்திருந்தது.
எனினும், பயங்கரவாத கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்ட முறையே ரத்து செய்யப்பட்டதெனவும், அவ் அமைப்பின் மீதான தடை தொடரும் என்றும் ஐரோப்பிய ஒன்றியம் குறிப்பிட்டது.
ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்ற தீர்ப்பின் எதிரொலியாக, புலிகள் அமைப்பை ஐரோப்பிய ஒன்றியம் தடைப்பட்டிலிலிருந்து நீக்கக்கூடாதென இலங்கையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அதனை ஒன்றியத்திற்கு அறிவிக்க வேண்டுமென சஜித் உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறிப்பிட்டிருந்தனர். இந்நிலையிலேயே புலிகள் அமைப்பை கறுப்புப் பட்டியலில் இருந்து நீக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2001ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 11ஆம் திகதி இடம்பெற்ற ‘செப்டெம்பர் 11′ தாக்குதலைத் தொடர்ந்து, அதற்கு அடுத்த வருடம் ஜனவரி மாதம் ஐரோப்பிய ஒன்றியத்தால் பயங்கரவாத கறுப்புப் பட்டியல் உருவாக்கப்பட்டது. இதில் 13 தனிநபர்கள் மற்றும் 22 அமைப்புக்களின் பெயர்கள் உள்ளடக்கப்பட்டன. கடந்த 2001ஆம் ஆண்டு இப் பட்டியலில் ஹமாஸ் அமைப்பு சேர்க்கப்பட்டதோடு, 2006ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு சேர்க்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது