ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத கறுப்புப் பட்டியலில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு நீக்கப்பட்டமையானது, தமிழ் மக்களின் அரசியலை சர்வதேசம் ஏற்றுக்கொண்டுள்ளதை வெளிப்படுத்துகின்றதென அருட்தந்தை மா.சக்திவேல் தெரிவித்துள்ளார்.
குறித்த தடை நீக்கம் தொடர்பாக கிளிநொச்சியில் இன்று (வியாழக்கிழமை) ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இனவாதத்தை பாதுகாக்கும் அரசாங்கம் இதனை பாதிப்பாக கருதி, இதற்கெதிராக செயற்படுமென தெரிவித்த அருட்தந்தை சக்திவேல், அப்போது தமிழ் மக்கள் அனைவரும் ஒருமித்த சக்தியாக ஒன்றுதிரண்டு குரல்கொடுக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.
மேலும், தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்கான உயிரை தியாகம் செய்தவர்களே விடுதலைப் புலிகள். இந்நிலையில், ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தின் தீர்மானத்தின் மூலம் அந்த தியாகத்திற்கு அங்கீகாரம் கிடைத்துள்ளதெனவும் அருட்தந்தை குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், எந்தவொரு தேசிய அரசியல் நிலைப்பாட்டை விடுதலைப் புலிகள் கையில் எடுத்தார்களோ, அதே நிலைப்பாட்டை தமிழ் அரசியல்வாதிகள் கையிலெடுத்து செயற்பட்டால் மாத்திரமே தமிழ் மக்களுக்கு விடுதலையும் எதிர்காலமும் உண்டு என இதன்போது சுட்டிக்காட்டினார்.