நாஜிப் படையைச் சேர்ந்த முன்னாள் உறுப்பினர் ஒருவரின் குடியுரிமையை கனேடிய அரசாங்கம் பறித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 93 வயதான ஹெல்முட் ஒபர்லாண்டர் என்பவரின் குடியுரிமையே பறிக்கப்பட்டுள்ளது.
இவருடைய குடியுரிமை நான்காவது முறையாக பறிக்கப்பட்டுள்ளதாக வழக்கறிஞர் ரொனால்ட் பவுல்டன் தெரிவித்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்த ரொனால்ட் பவுல்ட், ஏற்கனவே மூன்றுமுறை ஒபர்லாண்டரின் குடியுரிமை பறிக்கப்பட்ட நிலையில் அதனை மீட்க முடிந்ததாக தெரிவித்துள்ளார்.
உக்ரைனில் பிறந்த ஒபர்லாண்டர் ஜேர்மனிய இராணுவத்தினரால் இயக்கப்பட்ட நாஜி படையில் இணைந்து பணியாற்றியுள்ளார். சுமார் 2 மில்லியனுக்கும் அதிகமான மக்களின் உயிரிழப்புக்கு பொறுப்பான நாஜி படையில் 1941 ஆம் ஆண்டு முதல் 1943 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் பணியாற்றியுள்ளார்.
இந்நிலையில், மக்களின் உயிரிழப்புக்கு காரணமாக தான் பணியாற்றவில்லை என்று கூறும் ஒபர்லாண்டர் மொழிபெயர்பாளராக மாத்திரமே அங்கு பணியாற்றியதாகவும் தெரிவித்துள்ளார்.
போர்க்காலத்தின் பின்னர் 1954 ஆம் ஆண்டு ஒபர்லாண்டர் கனடாவில் குடிபெயர்ந்ததார் என்பது குறிப்பிடத்தக்கது.