கப்பல் மூலமான சரக்கு கொள்கலனில் கனடாவுக்குள் சட்டவிரோதமாக கடத்திவரப்பட்ட ஜோர்ஜியாவை சேர்ந்த நால்வர் தடுப்புக் காவலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கிட்டத்தட்ட ஒருவார காலம், அதிகாரிகளின் கண்காணிப்பின் கீழ் தடுத்து வைக்கப்பட்ட இவர்கள், தமது அகதி தஞ்சக் கோரிக்கையை முன்வைப்பதற்காக விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை அந்த நால்வரிடமும் செல்லுபடியாகக்கூடிய கடவுச் சீட்டுகள் இருந்ததாகவும், அவர்கள் நால்வரும் கனடாவில் அகதிக் கோரிக்கையை முன்வைப்பதற்கு தகுதி உடையவர்கள் என்பது இனங்காணப்பட்டுள்ளதாகவும் கனேடிய குடிவரவு மற்றும் அகதிகள் அதிகாரசபையின் அதிகாரி ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார்.
எனினும் இவர்களின் பெயர் விபரங்கள் மற்றும் இவர்கள் கனடாவுக்குள் வந்தமைக்கான காரணங்கள் என்பவற்றை வெளியிடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 20ஆம் திகதி காலை ஏழு மணியளவில், மொன்றியல் துறைமுகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர் ஒருவர், சரக்கு கொள்கலனின் உள்ளிருந்து யாரோ உதவிக்கு அழைக்கும் சத்தத்தினை கேட்டுள்ளார்.
இதனையடுத்து சம்பவ இடத்துக்கு அழைக்கப்பட்ட கனேடிய எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகள், அங்கிருந்த கொள்கலன் ஒன்றிலிருந்து 30இலிருந்து 40 வயது மதிக்கதக்க நான்கு ஆண்களை மீட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.