கேப்பாப்புலவு மக்களின் காணிகளுக்கு உரிய தீர்வு மிக விரைவில் கிடைக்குமென இராணுவ தளபதி மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க வடமாகாண முதலமைச்சரிடம் உறுதியளித்துள்ளார்.
யாழிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த இராணுவ தளபதி மகேஸ் சேனநாயக்க வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை அவரது இல்லத்தில் இன்று சந்தித்து கலந்துரையாடினார்.
அந்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே முதலமைச்சர் இவ்வாறு கூறினார். தொடர்ந்து தெரிவிக்கையில்,
“எமக்குள் நட்பு ரீதியான சந்திப்பு இடம்பெற்றது. அவர் இங்கு (யாழ்.மாவட்ட கட்டளைத் தளபதியாக) இருக்கும் போது, மயிலிட்டி மக்களின் காணிகளை விடுவிப்பேன் என கூறியிருந்தார். அவற்றினை நிறைவேற்றி விட்டதாக சுட்டிக்காட்டியிருந்தார்.
அத்துடன், போர் இல்லாத இந்த காலப்பகுதியில் எவ்வாறு இராணுவம் நடந்துகொள்ள வேண்டுமென்பது பற்றி இராணுவத்தினருக்கு அறிவுறுத்தி வருவதாகவும் கூறியிருந்தார்.
மக்களுக்கு நன்மை பயக்கும் வகையில் இராணுவத்தினரின் செயற்பாடுகள் அமைய வேண்டுமென்பது பற்றி அறிவுறுத்தி வருகின்றதாகவும் எடுத்துக் கூறினார்.
அத்துடன், கேப்பாப்புலவு மக்களின் காணிகள் விடுவிப்பது தொடர்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வேறு இடத்தில் முகாம் அமைப்பதற்குரிய நிதியினை மீள்குடியேற்ற அமைச்சர் டீ.எம் சுவாமிநாதன் தருவதாக தெரிவித்துள்ளார்.
மிக விரைவில் கேப்பாப்புலவு மக்களின் காணிகளுக்கு உரிய தீர்வு கிடைக்குமென உறுதியளித்துள்ளார்” என்று முதலமைச்சர் தெரிவித்தார்.