முல்லைத்தீவு மாவட்டத்தில் யுத்த காலத்திலும் அதற்குப் பிற்பட்ட காலத்திலும் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களுக்காக அவர்களுடைய உறவுகளால் முல்லைத்தீவில் தொடர்ச்சியான கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்று 148 ஆவது நாளாக முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக கூடாரம் அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
இறுதிக்கட்ட யுத்தத்தின்போது சரணடைந்த,இராணுவத்திடம் கையளித்த கைதுசெய்யப்பட்ட மற்றும் யுத்த காலத்தில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தமது உறவுகள் தொடர்பில் உரிய தீர்வை முன்னெடுக்குமாறு வலியுறுத்தி தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
அந்தவகையில் இவர்களுக்கான எந்தவித தீர்வுகளும் இதுவரை வழங்கப்படாத நிலையில் இலங்கை மெதடிஷ்த சபையினர், திருப்பணியாளர்களும் வடக்கு கிழக்கின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து கலந்துகொண்டு வடக்கு கிழக்கில் தொடரும் போராட்டங்களுக்கு ஜனாதிபதி உடனடியாக தீர்வு வழங்க வேண்டுமென வலியுறுத்தி முல்லைத்தீவு இராயப்பர் ஆலய முன்றலிலிருந்து காலை 10 மணிக்கு பேரணியாக முல்லைத்தீவு மாவட்ட செயலகம் வரை சென்று அங்கு ஜனாதிபதிக்கான மகயர் அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டது
இப்பேரணியில் வடக்கு கிழக்கின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து சுமார் 1௦௦ வரையான மத குருமார்களும் சுமார் 2௦௦ க்கு மேற்ப்பட்ட கணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களும் மற்றும் இதற்கு ஆதரவாக அரசியல் கட்சியினரும் தொண்டு நிறுவனங்களும் என நூற்றுக்கணக்கான மக்களும் கலந்த கொண்டனர்.