யாழ்ப்பாணக் குடாநாட்டின் பாதுகாப்பு நிலவரங்களை ஆராய்ந்த சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க, எந்தவொரு சூழ்நிலையிலும் இராணுவத் தலைமையகத்தின் ஆலோசனையைப் பெற்றுக் கொள்ளாமல், சட்டம் ஒழுங்கு விவகாரத்தில் தலையீடு செய்யக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளார்.
சிறிலங்கா இராணுவத் தளபதியாகப் பொறுப்பேற்ற பின்னர் முதல் முறையாக லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க நேற்றுமுன்தினம் யாழ்ப்பாணத்துக்குச் சென்றிருந்தார்.
நேற்றுமுன்தினம் காலையில் அவர் பலாலிப் படைத் தளத்தில் மூத்த படை அதிகாரிகளுடனும், படையினருடனும் கலந்துரையாடினார். இதன்போது அவர், யாழ். குடாநாட்டின் தற்போதைய நிலவரங்கள் குறித்து இராணுவ அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
குறிப்பாக, யாழ். குடாநாட்டில் இடம்பெற்ற சில துப்பாக்கிச் சூட்டு மற்றும் வாள்வெட்டு, தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாகவும், அதனை ஒட்டி எழுந்துள்ள நிலைமைகள் குறித்தும் விரிவாக ஆராய்ந்துள்ளார்.