புதுக்குடியிருப்பில் 682 ஆவது படைப்பிரிவு இராணுவத்தினரால் அபகரிக்கப்பட்ட பொதுமக்களின் காணிகள் இராணுவத்தினர், தமது சொத்து என்று பதாதையில் எழுதி காட்சிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முல்லைத்தீவு மாவட்டம், புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட பொதுமக்கள் தங்களது சொந்த நிலங்களை விடுவிக்குமாறு கோரி இந்த ஆண்டு ஐனவரி மாதம் 9 ஆம் திகதி ஜனநாயக ரீதியில் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த காணிகள் பொதுமக்களிடம் கையளிப்பது தொடர்பாக ஜனவரி மாதம் 28 ஆம் திகதி முல்லைத்தீவு இராணுவக் கட்டளை அதிகரியினால் எழுதப்பட்ட (SFHQ(MLT)LOG157/2017) இலக்க கடிதம் ஒன்று அந்த மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
அந்தக் கடிதத்தில் மூன்று படிநிலைகளில் காணிகள் விடுவிக்கப்படும் என்று முல்லைத்தீவு இராணுவக் கட்டளை அதிகாரி வாக்குறுதி அளித்திருந்தார்.
இந்த நிலையில் படிநிலை ஒன்றின்படி 7.75 ஏக்கர் காணிகள் இரண்டு வாரத்தில் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டுள்ளது.
படிநிலை 2இன் மூலம் 10 ஏக்கர் காணிகள் மூன்று மாதங்களில் விடுவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நான்கு மாதங்கள் கடந்த நிலையிலும் இராணுவத்தினர் சொன்னபடி செய்யாத நிலையில் இந்த காணிகள் அடங்கிய இராணுவ முகாம் வேலியில் “இராணுவத்தினருக்கு சொந்தமான சொத்து” என்று எழுதப்பட்ட பாதாதை ஒன்றை வைத்துள்ளதாக கூறப்படுகின்றது.
மேலும், இராணுவ முகமை அகற்றுவதற்கான நடவடிக்கை எதுவும் இதுவரை இராணுவத்தினர் எடுக்கவில்லை என அந்த பகுதி மக்கள் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது