யாழ்ப்பாணக் குடாநாட்டில் வன்முறைகளைக் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் பொறுப்பு சிறப்பு அதிரடிப்படையினரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக சிங்கள நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
வடக்கில் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக, 1000 இற்கும் அதிகமான சிறிப்பு அதிரடிப்படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். சிறப்பு அதிரடிப்படையினர் குழுக்களாக ரோந்து, உந்துருளி ரோந்து, சோதனை, போன்றவற்றில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்கள் இரவில் மாத்திரம் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததாகவும், அண்மையில் குடாநாட்டில் இடம்பெற்ற சில சம்பவங்களை அடுத்து, நாள் முழுவதிலும் சிறப்பு அதிரடிப்படையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சிறப்பு அதிரடிப்படைக்கு மேலதிகமாக சிறப்பு காவல்துறை குழுக்களும் யாழ்ப்பாணத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
வன்முறைகள் தொடர்பான தகவல்களைத் திரட்டுவதற்காக, புலனாய்வுப் பிரிவுகளை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் காவல்துறை தலைமையகம் மேற்கொண்டுள்ளது.
இதற்கென காவல்துறை புலனாய்வுக் குழுக்கள் யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என்றும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.