வடக்கு இளைஞர்களை அடையாள அட்டை இன்மையை காரணம் காட்டி கைது செய்யும் காலம் நிறைவுக்கு வந்துவிட்டது என நிம்மதி பெருமூச்சு விட்ட மக்கள் மறுபடியும் முதலில் இருந்தா என்று எண்ணும் செயற்பாடுகள் ஆரம்பித்துள்ளன.
முன்னைய காலங்களில் வடக்கு மக்கள் தமது கைப்பைகளில் பணம் வைப்பார்களோ இல்லையோ, நிச்சயமாக ஆமி ஐசியும், நஷனல் ஐசியும் வைக்க மறக்கமாட்டார்கள்.
ஆட்சி மாறியது பயம் இல்லாது அடையாள அட்டைகளை முக்கிய தேவைகளுக்கு மட்டும் பயன்படுத்தினார்கள்.
ஆனால் தற்போது யாழ்ப்பாணத்தில் நாளாந்தம் நடந்துவரும் சம்பவங்களை பார்த்தால் மறுபடியும் ஒரு அடையாள அட்டை சோதனையும், சந்திக்கு சந்தி சோதனை சாவடிகளும் வந்து விடுமோ என்ற அச்ச நிலை மக்கள் மத்தியில் தோன்றுகின்றது.
யாழ்.கோண்டாவில் மற்றும் திருநெல்வேலி பகுதிகளில் பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் நேற்று சனிக்கிழமை மாலை மேற்கொண்ட வீதிச் சோதனை நடவடிக்கையின்போது தங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணங்கள் இல்லை எனும் குற்றசாட்டில் 12 இளைஞர்கள் கைது செய்யப்பட்டு கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களின் பெற்றோர்கள் கோப்பாய் பொலிஸ் நிலையம் சென்று இளைஞர்களை தம்மிடம் ஒப்படைக்குமாறு கேட்ட போது, விசேட அதிரடிப்படையினரே கைது செய்தமையினால் அவர்களின் அனுமதியின்றி விடுவிக்க முடியாது என பொலிஸார் தெரிவித்ததாக உறவுகள் தெரிவித்தனர்.
அதேபோல துன்னாலை பகுதியில் இரண்டு நாட்களாக மேற்கொள்ளப்படும் விசேட பொலிஸ் அதிரடிப்படையின் சுற்றிவளைப்பு நடவடிக்கை மக்கள் மத்தியில் மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
அத்துடன் ஆங்காங்கே வீதிகளில் பொலிஸ் அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு சோதனைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்நிலை எங்கு போய் முடியும் என்பது மக்கள் மத்தியில் இருக்கும் கேள்வி? இதுதான் நல்லாட்சி அரசா?