2007ஆம்ஆண்டு படையினரால் சேதமாக்கப்பட்ட மட்டக்களப்பு படுவான்கரையின் மகிழடித்தீவில் உள்ள உயிர்நீர்த்தவர்களின் நினைவுத்தூபியினை புனர்நிர்மாணம் செய்யும் பணிகள் இன்று காலை ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
1987ஆம் ஆண்டு 01ஆம் மாதம் 28ஆம் திகதி மகிழடித்தீவில் உள்ள இரால் பண்ணையில் வேலையில் இருந்தவர்கள் 168பேர் இராணுவத்தினரால் படுகொலைசெய்யப்பட்டனர்.
இவர்கள் நினைவாக கடந்த காலத்தில் விடுதலைப்புலிகள் இயக்கத்தினால் மகிழடித்தீவு சந்தியில் இந்த நினைவுத்தூபி அமைக்கப்பட்டு தொடர்ச்சியாக படுகொலை நினைவுகூரப்பட்டுவந்தது.
இந்த நிலையில் 2007ஆம்ஆண்டு மட்டக்களப்பு மாவட்டம் படை நடவடிக்கை மூலம் விடுதலைப்புலிகளிடம் இருந்து விடுவிக்கப்பட்ட நிலையில் குறித்த நினைவுத்தூபியும் சேதமாக்கப்பட்டது.
கடந்த காலத்தில் குறித்த படுகொலை நினைவுகூரப்பட்டுவந்த நிலையிலும் நினைவுத்தூபி புனரமைக்கப்படாத நிலையிலேயே இருந்துவந்தது.இது தொடர்பில் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரமின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டதை தொடர்ந்து இன்று காலை அதன் புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.