வடகொரியாவின் தொடர் ஏவுகணைச் சோதனைகளுக்கு அதிருப்தியை தெரிவிக்கும் வகையில், புதிய தடைகளை விதிக்கும் விடயத்திற்கு ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை இணக்கம் தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில், வடகொரியாவின் ஏற்றுமதிகள் மற்றும் வடகொரியாவில் ஏற்படுத்தப்படும் முதலீடுகள் ஆகியவற்றிற்கு தடை விதிக்கப்பட வேண்டும் எனும் தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளன.
ஐ.நாவுக்கான அமெரிக்காவின் தூதுவர் நிக்கி ஹெய்லி (Nikki Haley), குறித்த தீர்மானங்கள் தொடர்பில் கருத்து தெரிவித்த போது, “ஐ.நாவால் நாடொன்றின் மீது இதுபோன்ற கடுமையான தடைகள் விதிக்கப்பட தீர்மானிக்கப்பட்டுள்ளமை ஒரு தலைமுறைக்குப் பிறகே ஆகும்” என தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூலை மாதத்தில் மாத்திரம் வடகொரியாவால் கண்டம் விட்டு கண்டம் பாயும் இரு ஏவுகணைச் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
அத்துடன், அமெரிக்காவை மிக எளிதாக தாக்கலாம் எனவும் வடகொரியா மேற்படி சோதனைகளின் பின்னர் தெரிவித்திருந்தது. இருப்பினும், குறித்த விடயம் எந்த அளவுக்கு சாத்தியம் என்பது தொடர்பில் நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.
இதே வேளை, வடகொரியாவின் மிலேச்சத்தனமான நடவடிக்கைகளுக்கு தென்கொரியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்திருந்ததோடு ஐ.நாவும் அதிருப்தி அடைந்தமை குறிப்பிடத்தக்கது.