முன்று மாகாண சபைகளுக்கு நடத்தப்படும் தேர்தலை தள்ளிப்போடுவதற்கும், தற்போது மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை பறித்து அவற்றை நாடாளுமன்றத்திடம் ஒப்படைக்கும் நோக்கத்துடனும், அரசு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ள அரசியல் சாசனத்தின் 20வது திருத்தத்தை எதிர்த்து வழக்கு தாக்கல் செய்யப் போவதாக தேர்தல் கண்காணிப்பில் ஈடுபட்டுவரும் அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.
தேர்தல் கண்காணிப்பில் ஈடுபட்டுவரும் கபே அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரஜித் கீர்த்தி தென்னக்கோன் கருத்து தெரிவித்தபோது இந்த வருட இறுதியில் கிழக்கு, வட மத்திய, மற்றும் சப்ரகமுவ மாகாணங்களுக்கான தேர்தலை நடத்த தேர்தல் ஆணைக்குழு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.
அதே சமயத்தில் அரசியல் சாசனத்தில் அரசு 20வது திருத்தத்தை மேற்கொண்டு இந்த மாகாண சபை தேர்தல்களை இரு ஆண்டுகள் வரை தள்ளிப்போட முயற்சித்து வருவதாக குற்றம்சாட்டிய ரஜித் கீர்த்தி தென்னக்கோன், இதன் முலம் அரசியல் சாசனத்தில் உறுதிபடுத்தியுள்ள மக்களின் வாக்களிக்கும் உரிமை மறுக்கப்படுவதாக குற்றம்சாட்டினார்.
மேலும் கருத்து தெரிவித்த ரஜித் கீர்த்தி தென்னக்கோன், அரசு நாடாளுமன்றத்தில் சமரப்பிக்க இருக்கும் அரசியல் சாசன 20வது திருத்தத்தின் மூலம் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை பறித்து அவற்றை நாடாளுமன்றத்திடம் கொடுத்துவிட திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளதாக கூறினார்.
தற்போதைய அரசாங்கம் மாகாண சபைகளுக்கு கூடுதல் அதிகாரத்தை பெற்றுக்கொடுப்பதாக கூறியே ஆட்சிக்கு வந்ததாக தெரிவித்த அவர், தற்போது அதன் அதிகாரங்களை மட்டுப்படுத்த நடவடிக்கைகளை முன்னெடுப்பது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை மீறுகிற செயலென குற்றஞ்சாட்டியுள்ளார்.
எனவே இந்த நடவடிக்கைகளை எதிர்த்து வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்திருக்கிறார்.