ஆயுதப் போராட்டத்தால் வடக்கில் முடக்கப்பட்டிருந்த இலங்கை சுங்கத் திணைக்களத்தின் செயற்பாடுகள், மூன்று தசாப்தங்களின் பின்னர் இன்று (வியாழக்கிழமை) மீளவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
வடக்கின் பல இடங்களில் அதன் உப அலுவலகங்கள் திறந்துவைக்கப்படவுள்ள நிலையில், இன்றைய தினம் காங்கேசன்துறையில் அதன் முதலாவது உப அலுவலகம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
நிதி மற்றும் ஊடக அமைச்சர் மங்கள சமரவீர பிரதம அதிதியாக கலந்துகொண்டு, அலுவலகத்தை திறந்துவைத்தார்.
நிதியமைச்சருடன், சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், நிதி இராஜாங்க அமைச்சர் எரான் விக்ரமரத்ன, சுங்கப் பணிப்பாளர் நாயகம் சுலா நந்தப்பேரா, வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, வடக்கு மாகாண கடற்படை கட்டளை தளபதி, யாழ். மாவட்ட இராணுவ கட்டளை தளபதி, காங்கேசன்துறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.
யாழ். பிரதான தபால் நிலையத்தில் இதுவரை காலமும் சுங்கத் திணைக்களத்தின் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், இன்று முதல் பிரத்தியேகமாக அதன் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இதேவேளை, சுங்கத் திணைக்களத்தின் அலுவலகங்கள் யாழ்ப்பாணம், பருத்தித்துறை, வல்வெட்டித்துறை, ஊர்காவற்றுறை மற்றும் தலைமன்னார் ஆகிய இடங்களிலும் விரைவில் திறந்துவைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.