முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேருக்கும் விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை 2014-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் ஆயுள் தண்டனையாக குறைத்ததுடன், 3 பேரையும் விடுதலை செய்வது குறித்து அரசு உரிய முடிவு எடுக்கலாம் எனவும் தீர்பளித்தது.
இதனைத் தொடர்ந்து, 3 பேர் மட்டுமின்றி இந்த வழக்கில் ஏற்கனவே ஆயுள் தண்டனை அனுபவித்துவரும் நளினி, ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேரையும் விடுதலை செய்யப்போவதாக தமிழக அரசு அறிவித்தது. இதனை எதிர்த்து அப்போதைய மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு உச்ச நீதிமன்றில் ரிட் மனு தாக்கல் செய்தது. இதில் உச்ச நீதிமன்றம் 7 பேரையும் விடுதலை செய்வதற்கு இடைக்கால தடைவிதித்தது.
இந்தவழக்கில் ராஜீவ் காந்தி கொலை வழக்கு கைதிகளை விடுவிப்பது குறித்து தமிழக அரசு வெளியிட்ட உத்தரவு செல்லுமா? என்பது குறித்த கேள்வியை விசாரிக்க நீதிபதிகள் ரஞ்ஜன் கோகாய், பிரபுல்ல சி.பந்த், ஏ.எம்.கன்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு அமைக்கப்பட்டது. இந்த வழக்கு நீண்ட நாட்களாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை.
இந்நிலையில் நேற்று ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகளில் ஒருவரான பேரறிவாளன் சார்பில் சட்டத்தரணி ராமசுப்பிரமணியன் உச்ச நீதிமன்றில் நீதிபதி ரஞ்ஜன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பு முன்னிலையாகி, பேரறிவாளன் உள்ளிட்ட ராஜீவ் கொலை குற்றவாளிகள் கடந்த 26 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்துவிட்டனர். அவர்கள் தொடர்பான இந்த வழக்கு நீண்ட நாட்களாக நிலுவையில் இருப்பதால் அதனை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி ரஞ்ஜன் கோகாய் இந்த வழக்கு வருகிற 14-ந் தேதிக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று உத்தரவிட்டார்.
FacebookTwitterGoogle+Share