நல்லூரில் உள்ள தியாகதீபம் திலீபனின் நினைவிடத்தை புனரமைத்து, அதனைத் தொடர்ந்து பராமரிப்பதற்கு வடமாகாண சபை முடிவு செய்துள்ளதாக அவைத்தலைவர் சிவஞானம் தெரிவித்துள்ளார்.
வடமாகாண சபை சிறப்பு அமர்வு இன்று நடைபெற்ற போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தியாகி திலீபனின் நினைவிடத்தை சூழவுள்ள பகுதிகளை அறிக்கையிட்டு, யாழ்.மாநகர சபையிடம் இருந்து குறித்த பகுதியை மாகாண சபை பொறுப்பேற்றுக்கொள்ளும் முகமாக, முதல் கட்டமாக ஆணையாளருக்கு கடிதம் மூலம் கோரப்பட்ட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கான நடவடிக்கைகளை முதலமைச்சர் முன்னெடுக்க வேண்டும் எனவும், இடத்தினை பொறுப்பேற்ற பின்னர் மாகாணசபையினால் நினைவிடம் புனரமைக்கப்பட்டு அதனை மாகாண சபை பராமரிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதனை தியாக தீபம் திலீபனின் நினைவு வாரத்திற்கு முன்பாக முன்னெடுக்கும் முகமாக, விரைந்து நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் வடமாகாணசபை அவைத்தலைவர் சிவஞானம் மேலும் தெரிவித்துள்ளார்.