இன விரோதம், வெறுப்புத் தன்மை உள்ளிட்டவற்றுக்கு எதிர்ப்பினை வெளியிடும் வகையிலும், அன்பு, சகிப்புத் தன்மை, புரிந்துணர்வு என்பவற்ற வலியுறுத்தும் விதமாகவும் நேற்று வன்கூவரில் முன்னெடுக்கப்பட்ட மாபெரும் பேரணியில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டுள்ளனர்.
அன்பு, பன்முகத்துவம், ஒற்றுமையின் பலம் ஆகியவற்றை வலிறுத்தும் பதாதைகளுடன் முன்னெடுக்கப்பட்ட இந்த பேரணில், “சலவையின் போது மட்டுமே நிறங்களை வேறுபடுத்த வேண்டும்” போன்ற வாசகங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.
வன்கூவர் நகர மண்டபத்திற்கு வெளியே இடம்பெற்ற இந்த பேரணியில் சுமார் 4,000 பேர் வரையில் கலந்து கொண்டதனை காவல்துறையினரும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
பெருமளவானோர் இந்த பேரணியில் கலந்து கொண்டதன் காரணமாக, பேரணி இடம்பெற்ற பகுதியில் பல்வேறு வீதிகளை மூடி, சில மணி நேரங்களுக்கு போக்குவரத்துகளை வேறு மார்க்கமாக மாற்றிவிட வேண்டிய நிர்ப்பந்தம் அதிகாரிகளுக்கு ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த பேரணியில் இத்தனை ஆயிரம் பேர் மரியாதை நிமித்தமும்,அன்புடனும் ஒன்றுகூடியிருப்பது, இவ்வாறான நிலைப்பாடுகளுக்கான பலத்தினை அதிகரிப்பதை வெளிக்காட்டுவதாக பிரிட்டிஷ் கொலம்பிய இந்திய சமூகங்களின் தலைவர்கள் சங்கத்தின் துணைத் தலைவர் பொப் சம்பர்லின் தெரிவித்துள்ளார்.
தற்போது கனேடிய வரலாற்றில் மிகவும் இக்கட்டான காலகட்டம் எனவும், பழங்குடியின மக்களுடனான மீள் நல்லிணக்க முயற்சிகள் வெற்றியடைவதற்கு அனைத்து கனேடியர்களும் ஒன்றுபட்டு நிற்க வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஒற்றை மனப்போக்கை கொண்டவர்கள், வெளிப்படையான கொள்கைகள் அற்றவர்களுக்கு அப்பால் சென்று, அன்பு, ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை, புரிந்துணர்வு என்பவற்றை அனைவரும் வளர்த்துக் கொள்ள வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதேவேளை வன்கூவரில் முன்னெடுக்கப்பட்ட இந்த பேரணியை தனது சமூக வலைத்தளப் பதிவினூடாக வெகுவாக வரவேற்றுள்ள பிரதமர் ஜஸ்டின் ரூடோ, பன்முகத் தன்மை என்பதே எப்போதும் எமது பலமாக விளங்கும் என்று தெரிவித்துள்ளார்.
நேற்றைய இந்த பேரணியின்போது பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்ட போதிலும், எந்தவிதமான வன்முறைகளும் இடம்பெறவில்லை எனவும், எவரும் காயமடையவில்லை என்பதையும் காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.