ஸ்
பெயினில் கடந்த வாரம் வெவ்வேறு இடங்களில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 14 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பார்சிலோனாவின் லாஸ் ராம்பிளாஸ் பகுதியில், மக்கள் கூட்டத்தின் மீது வேன் மோதி நடத்தப்பட்ட தாக்குதலில் 13 பேர் பலியானார்கள். இச்சம்பவத்துக்கு முதல் நாள் பார்சிலோனா நகருக்கு 200 கி.மீ. தொலைவில் உள்ள அல்கானார் நகரத்தில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் ஒருவர் உயிரிழந்தார். பார்சிலோனா வுக்குத் தெற்கிலேயே உள்ள கேம்பிரில்ஸ் என்ற சுற்றுலாத் தலத்திலும் வாகனம் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.
2004-ல் மாட்ரிட் நகரில் நடந்த ரயில் குண்டுவெடிப்பு களுக்குப் பிறகு பெரிய பயங்கரவாதத் தாக்குதல் இது. இதற்கு ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்றிருக்கிறது. மக்கள் கூட்டம் மீது வாகனங்களைச் செலுத்தித் தாக்குதல் நடத்துவது பயங்கரவாதிகளின் புதிய உத்தியாக மாறியிருக்கிறது. ஐரோப்பிய நகரங்களில் நடைபெறும் சம்பவங்கள் இதையே உணர்த்துகின்றன.
பார்சிலோனா தாக்குதலில் ஐ.எஸ். அமைப்பு நேரடியாகப் பங்கேற்கவில்லை. எனினும், தங்கள் நாடுகளிலிருந்து அந்த அமைப்பில் சேர்கிறவர்களை அடையாளம் கண்டு தடுக்க வேண்டிய மிகப் பெரிய சவாலை ஐரோப்பிய நாடுகள் எதிர்கொண்டிருக்கின்றன. இராக்கிலும் சிரியாவிலும் ஐ.எஸ். அமைப்பின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகள் சுருங்கி, அங்கிருந்து அவர்கள் வெளியேறும் நிலை ஏற்பட்டு விட்டதால் அங்கிருந்தவர்கள் தத்தமது சொந்த நாடு களுக்குத் திரும்பி, இந்தத் தாக்குதல்களை நடத்துவதற்கு வாய்ப்புகள் அதிகம்.
ஐரோப்பிய நாடுகளில் வாகன மோதல் தாக்குதல்கள் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தியிருக்கின்றன. உளவு அமைப்புகளும், பாதுகாப்புப் படைகளும் இந்தப் புதிய வகை தாக்குதலை எப்படிச் சமாளிப்பது என்று புரியாமல் திகைக் கின்றன. தனிப்பட்ட நபர்கள், வாகனங்களைப் பயன்படுத்தித் தாக்குவதால் முன்கூட்டியே கண்டுபிடிப்பது இயலாது. தாக்குதல்கள் தொடர்பாக துப்புத் துலக்குவதில் ஸ்பெயினின் உளவுப் பிரிவு பிரான்ஸ், பிரிட்டன் நாடுகளைவிட நன்றாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. ஆனாலும், இந்தத் தாக்குதலை முன்கூட்டியே தடுக்க முடியவில்லை.
2015 நவம்பரில் பாரிஸ் நகரில் ஐ.எஸ். நடத்திய தாக்குதல்களில் 130 பேர் இறந்தனர். பிரான்ஸின் உளவுப் பிரிவின் தோல்வி அதில் எதிரொலித்தது. 2008 ஸ்பெயின் உளவுப் பிரிவு பல பெரிய தாக்குதல் முயற்சிகளை முன்கூட்டியே அறிந்து தடுத்துநிறுத்திவிட்டது. 2016-ல் 10 தனிப்பட்ட சதிச் செயல்களையும் தடுத்தது. பயங்கரவாதிகளுக்கு ஆதரவாகச் செயல்பட்ட பல கூடுதல் பிரிவுகள் இந்த ஆண்டு அடையாளம் காணப்பட்டன. பயங்கரவாதிகள் தங்கள் ஆயுதங்களையும், வியூகங்களையும் மாற்றிக்கொண்டே வரும் சூழலில், அதை எதிர்கொள்வதற்கு உலக நாடுகள் எல்லா வகையிலும் தயாராக இருக்க வேண்டும் என்பதை இந்தத் தாக்குதல் சம்பவங்கள் உணர்த்தியிருக்கின்றன!