யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனுக்கு சிறப்பு அதிரடிப்படையினரின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
கடமை நேரத்தில் நீதிமன்றத்திலும், அவருடைய உத்தியோகபூர்வ இல்லத்துக்கும் இந்த சிறப்பு பாதுகாப்பை அரசாங்கம் வழங்கியுள்ளது.
நல்லூர் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தையடுத்து நீதிபதி இளஞ்செழியனுடன் உடனடியாகத் தொடர்பு கொண்ட இலங்கை சனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அந்தச் சம்பவம் பற்றிய விபரங்களைக் கேட்டறிந்ததுடன், அவருடைய பாதுகாப்பு தொடர்பிலான விடயங்களிலும் கூடிய கவனம் செலுத்தியிருந்தார்.
அதேநேரம் இலங்கைக்கான அமெரிக்க தூதுவரும் நீதிபதியுடன் தொடர்பு கொண்டு, நல்லூர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் பற்றிய விபரங்களைக் கேட்டறிந்ததுடன், அவருடைய பாதுகாப்பு தொடர்பாகவும் கலந்துரையாடியிருந்தார்.
இவற்றையடுத்தே நீதிபதி இளஞ்செழியனுக்கு அதிரடிப்படை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் செம்மணி புதைகுழி வழக்கு விசாரணைக்கான சிறப்பு நீதிபதியாக நீதிபதி இளஞ்செழியன் நியமிக்கப்பட்டிருந்த போது, சனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவினால் அவருக்கு சிறப்பு பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.
அந்த வேளையில் அமெரிக்க தூதுவராக இருந்த ஏட்லி வில்ஸ்சும் நீதிபதியின் பாதுகாப்பு தொடர்பில் சிறப்பு கவனம் செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நீதிபதி இளஞ்செழியன் வவுனியாவில் கடமையாற்றிய போது, அவருக்கு சிக்மா உந்துருளி படையணி பாதுகாப்பு வழங்கியிருந்தது.