வடமராட்சிப் பகுதிக்கு மீண்டும் விசேட அதிரடிப் படையினர் வரவழைக்கப்பட்டு சுற்று ரோந்து நடவடிக்கைகளும், வீதிச் சோதனைகளும் நடத்தப்பட்டு வருகின்றது.
கடந்த மாதம் 9ஆம் திகதி சட்ட விரோதமான முறையில் மணல் ஏற்றி வந்த ஹன்டர் வாகனம் மீது குடத்தனைப் பகுதியில் வைத்து பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் துன்னாலையைச் சேர்ந்த யோகராசா தினேஸ் என்ற இளைஞர் பலியானார்.
இதனைத் தொடர்ந்து இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களில் பருத்தித்துறைப் பொலிஸாரின் ஜீப் வண்டி ஒன்றும் காவலரணும் தாக்கி சேதப்படுத்தி தீ வைக்கப்பட்டது.
அத்துடன் அதிரடிப் படையினரின் பவள் கவச வாகனம் மீதும் கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
அதனடிப்படையில் கடந்த மாதம் 21ஆம் திகதி வல்லிபுரம் மாவடிச் சந்தியில் வைத்து கடலோரக் காவல் பணியினை முடித்து விட்டு முகாம் திரும்பிக் கொண்டிருந்த கடலோரக் காவற்படையினர் மீது தாக்குதல் மேற்கொண் டதில் ஒருவர் படுகாயமடைந்தார்.
இதனையடுத்து மறுநாள் அப்பகுதிக்கு விரைந்த இலங்கை கடற்படைத் தளபதி தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட இடத்தினைப் பார்வையிட்டதுடன் இது சம்பந்தமாக பாதுகாப்பு நடவடிக்கை தொடர்பிலும் உயர் அதிகாரிகளின் கவனத்திற்கும் கொண்டு சென்றிருந்தார்.
இதனை விடவும் யாழ்ப்பாணத்தில் பொலிஸார் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் யாழ். மேல்நீதிமன்ற நீதிபதி இலக்கு வைக்கப்பட்ட சம்பவம் என்பவற்றை அடுத்து பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தரவின் பணிப்பின்படி விஷேட அதிரடிப் படையினர் யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அவ் அணியினர் முதலாம் கட்டமாக இம் மாதம் 05, 06 மற்றும் 07ஆம் திகதிகளில் துன்னாலைப் பகுதிகளில் சுற்றி வளைப்புகளை மேற்கொண்டு வீடு வீடாக தேடுதல்கள் நடத்தப்பட்டது.
விஷேட அதிரடிப் படையினருடன் பொலிஸாரும் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். மூன்று நாள் நடவடிக்கையினை முடித்துக் கொண்ட விஷேட அதிரடிப் படையினர் மீளப் பெறப்பட்டிருந்தனர்.
ஆனால் மீண்டும் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை விஷேட அதிரடிப் படையினரின் பீல்ட் பைக்குடன் துன்னாலைப் பகுதியினை அண்டிய பகுதிகளில் சுற்று ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதுடன் வீதிச் சோதனைகளையும் மேற்கொண்டுள்ளனர்.
இச் சுற்று ரோந்து நடவடிக்கை நேற்றும் தொடர்ந்து இடம்பெற்றது. இவ் இரண்டு நாட்களிலும் விஷேட அதிரடிப் படையினரினால் எவரும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது