ஏமன் தலைநகர் சனாவின் புறநகர்ப் பகுதியில் வான் தாக்குதலால் சேதமடைந்த விடுதியின் இடிபாடுகளிலிருந்து குறைந்தது 35 உடல்களை மீட்டுள்ளதாக ஹூதி கிளர்ச்சியாளர்கள் மற்றும் செம்பிறை மீட்புப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
விமானத் தாக்குதலில் சேதமடைந்த இரண்டு அடுக்கு மாடி ஹோட்டல்.
சனாவில் இருந்து 20 கி.மீ. தொலைவில், அர்ஹாப் மாவட்டத்தில் உள்ள இந்த இரண்டு அடுக்கு மாடி விடுதியின் மீது விமானங்கள் குண்டு வீசியதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர். இத் தாக்குதலில் 13 பேர் காயமடைந்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் செம்பிறை இயக்கத்தின் ஏமன் பிரிவுத் தலைவர் ஹுசைன்-அல்-தவில் கூறியுள்ளார்.
தலைநகரை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் கிளர்ச்சியாளர்கள் இந்தத் தாக்குதல் செளதி தலைமையிலான கூட்டணியால் நடத்தப்பட்டது என்று தெரிவித்துள்ளனர்.
ஏமனில் உள்ள ஐ.நா அகதிகள் முகமை, பொதுமக்களின் உயிருக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என அனைத்துத் தரப்பினரையும் வலியுறுத்தியுள்ளது.
2015-ம் ஆண்டில் இருந்து ஹூதி இயக்கத்தினர் மீது கூட்டணிப்படையினர் நடத்திவரும் போரில் 8,167க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டிருப்பதாகவும், 46,335 பேர் காயமடைந்திருப்பதாகவும் ஐ.நா. தெரிவித்துள்ளது.