ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில் தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றவாளிகளில் ஒருவர், பெரிய தாக்குதல் ஒன்றை நடத்த திட்டமிட்டிருந்ததை ஒப்புக்கொண்டதாக ஸ்பெயின் நீதிமன்ற தகவல்கள் கூறுகின்றன
கடந்த வாரம் ஸ்பெயினின் காட்டலோனியா நகரில் 15 பேரை பலி வாங்கிய தாக்குதலில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நான்கு இஸ்லாமியவாத தீவிரவாதிகள் மேட்ரீட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
நான்கு பேரும் வட ஆப்ரிக்காவை பூர்வீகமாக கொண்டவர்கள்.அதில் 22 வயது மதிக்கத்தக்க முகமத் ஒளலி செம்லால் என்பவர் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லும் போது மருத்துவமனை உடையில் காணப்பட்டார்.
கடந்த புதன்கிழமையன்று, இந்த சந்தேக நபரின் குண்டு தயாரிப்பு தொழிற்சாலையாக கூறப்படும் கட்டடம் வெடித்துச் சிதறியபோது அவர் காயமடைந்து சிகிச்சை பெற்றுவந்தார். அந்த சம்பவத்தில் அவரின் கூட்டாளிகள் இரண்டு பேர் கொல்லப்பட்டனர்.
இந்த வெடி விபத்து அந்த குழுவின் திட்டத்தை மாற்றியது. அவர்களில் ஒருவர், பார்சிலோனாவில் கூட்டத்திற்குள் வாடகை வேனை மோதி 13 பேரை கொன்றார் என வழக்கறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.