போராட்டமே வாழ்வாகியுப் போயுள்ள தமக்கு இறுதியில் எஞ்சப்போவது என்ன என்று தொடர் நில மீட்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும்கிளிநொச்சி – இரணைதீவு மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
தலைநகர் கொழும்பில் போராட்டம் நடத்தியும் இதுவரை எவ்வித சாதகமான பதிலும் வழங்கப்படவில்லை என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் அங்கலாய்த்துள்ளனர்.
பூநகரி – இரணைமாதா நகரில் உள்ள இராணுவ முகாம் முன்பாக தேவாலயத்திற்கு அருகில் முன்னெடுக்கப்பட்டுவரும் தொடர் போராட்டம் இன்று 115 ஆவது நாளாக இடம்பெறுகின்றது.
அரசியல்வாதிகள் உட்பட அனைவரும் வழங்கிய வாக்குறுதிகள் பொய்த்துப் போயுள்ள நிலையில், பலராலும் ஏமாற்றப்பட்டுள்ளதாக ஆதங்கம் வெளியிட்டுள்ள மக்கள், தொடர்ச்சியாக தமது பூர்வீக காணியை விடுவிக்குமாறு வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
அதேவேளை தமது காணிகளைக் கையகப்படுத்தியிருக்கும் ஸ்ரீலங்கா கடற்படையே தமது வாழ்வாதாரங்கள் அனைத்தையும் அனுபவித்து வருவதாக ஆதங்கம் வெளியிட்டுள்ள மக்கள், அநாதரவாக்கப்பட்டுள்ள தமக்கு விரைவில் உரிய தீர்வைப் பெற்றுத்தருமாறு வலியுறுத்தியுள்ளனர்.
இதேவேளை அனைத்து வளங்களும் நிறைந்த தமது பூர்வீக நிலத்தில் ஸ்ரீலங்கா கடற்படை உல்லாசமாக இருக்க, காணி உரிமையாளர்களான தாம் பிச்சை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.