புதுடெல்லியைத் தளமாகக் கொண்ட, இந்தியா பவுண்டேசன் அமைப்பின் ஏற்பாட்டில், இந்தியப் பெருங்கடல் கருத்தரங்கு-2017 வரும் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் கொழும்பில் நடைபெறவுள்ளது.
அலரி மாளிகையில் நடைபெறவுள்ள இந்த கருத்தரங்கை, இந்தியா பவுண்டேசனுடன் இணைந்து, சிங்கப்பூரின் அனைத்துலக கற்கைகளுக்கான ராஜரத்தினம் பாடசாலை, கொழும்பு அடிப்படைக் கற்கைகளுக்கான தேசிய நிறுவகம் ஆகியன இணைந்து ஒழுங்கு செய்துள்ளன.
இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் அமைதி, முன்னேற்றம், செழிப்பு என்ற தொனிப் பொருளில் இந்தக் கருத்தரங்கு இடம்பெறும்.
சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்தக் கருத்தரங்கிற்கு தலைமை வகிப்பார். சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இந்த கருத்தரங்கில் முக்கிய உரை நிகழ்த்துவார்.
இதில், சிஷெல்ஸ் துணை அதிபர் வின்சன்ட் மெரிட்டன், சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன், இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா ஸ்வராஜ், ஆகியோர் முக்கிய விருந்தினர்களாக கலந்து கொள்ளவுள்ளனர்.
பங்களாதேஸ், ஜப்பான், நேபாளம், சிறிலங்கா, மொறிசியஸ், வியட்னாம், ஆகிய நாடுகளின் அமைச்சர்கள் மட்டக் குழுக்களும், அமெரிக்கா, அவுஸ்ரேலியா, இந்தியா, சிறிலங்கா, பங்களாதேஸ், ஜேர்மனி, கென்யா, தென்கொரியா, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளின் மூத்த அதிகாரிகளும் இந்தக் கருத்தரங்கில் பங்கேற்கவுள்ளனர்.
இந்தக் கருத்தரங்கில் 35 நாடுகளில் இருந்து பிரதிநிதிகளும், 25 நாடுகளின் பேச்சாளர்களும் பங்கேற்கவுள்ளனர்.