ஜெனிவா தீர்மானத்தை நிறைவேற்றுவதில் சிறிலங்கா எந்த முன்னேற்றத்தையும் காட்டத் தவறியிருப்பது, அனைத்துலக சமூகத்தை ஏமாற்றமடையச் செய்துள்ளது என்ற, ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதியின் கருத்தை, சிறிலங்காவுக்கான அமெரிக்க தூதுவரும், ஒப்புக் கொண்டுள்ளார்.
கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்திருந்த செவ்வியில், சிறிலங்காவுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின், இராஜதந்திர விவகாரங்களுக்கான பிரதிநிதி போல் கொட்பிறி, ‘சிறிலங்கா அரசாங்கம் கூடிய விரைவில் சிறப்பு நீதிமன்றம் ஒன்றையோ, நீதிப் பொறிமுறையையே அமைப்பதற்கான வாய்ப்பு எதுவும் தென்படவில்லை.
தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, 18 மாதங்கள் கழித்தும், சிறிலங்கா அரசாங்கம் எந்த முன்னேற்றத்தையும் காண்பிக்கவில்லை என்பது அனைத்துலக சமூகத்தை ஏமாற்றமடையச் செய்துள்ளது
கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் காணாமல் போனோருக்கான பணியக சட்டம் நிறைவேற்றப்பட்ட போது. நான் நம்பிக்கையுடன் இருந்தேன். ஆனால் இன்னமும் எந்த முன்னேற்றமும் இல்லை.
இதன் தொடர்ச்சியாக உண்மை ஆணைக்குழு நிறுவப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது வெறும் வரைவு நிலையிலேயே இருக்கிறது.” என்று கூறியிருந்தார்.
இந்தச் செவ்வி குறித்து, தனது கீச்சகப் பக்கத்தில் அமெரிக்க தூதுவர் அதுல் கெசாப் பதிவு ஒன்றை இட்டுள்ளார்.
“நல்லிணக்கம் தொடர்பான சில மிக முக்கியமான விடயங்களை ஐரோப்பிய ஒன்றியத்தின், இராஜதந்திர விவகாரங்களுக்கான பிரதிநிதி போல் கொட்பிறி வெளியிட்டுள்ளார். ஐ.நாவுக்கான சிறிலங்காவின் கடப்பாடுகளில் முன்னேற்றங்கள் தேவை” என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.