யாழ்ப்பாணம் – மண்டைத்தீவு – சிறுத்தீவு கடற்பரப்பில் படகு கவிழ்ந்ததில் கடலில் மூழ்கி உயிரிழந்த ஆறு மாணவர்களின் மரணத்திற்கான காரணம் யாழ்ப்பாண பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து வெளியாகியுள்ளன.
பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருவதாவது,
நடைபெற்றுவரும் க.பொ.த. உயர்தர பரீட்சைக்கு தோற்றிய 7 மாணவர்கள், அதில் ஒரு மாணவனின் பிறந்த நாளை கொண்டாடும் முகமாக குறித்த கடற்கரைப்பகுதியில் ஒன்று கூடியுள்ளனர்.
குறித்த சமயம் அம் மாணவர்கள் மது அருந்தியிருந்ததால் அதிக மதுமயக்கத்தில் இருந்தனர். இந்நிலையில், மாணவர்கள் 7 பேரும் கடற்கரைப் பகுதியில் இருந்த படகொன்றையெடுத்து கடலுக்குள் சென்றுள்ளனர். அவர்கள் பயணித்த படகு பழுதடைந்த நிலையில் காணப்பட்டதுடன் அது பயணத்திற்கு ஏற்ற தரத்தைக் கொண்டிராத வள்ளத்திலேயே மாணவர்கள் ஏறி கடலுக்குள் சென்றுள்ளனர்.
இந்நிலையில் மாணவர்கள் 6 பேரின் மரணத்திற்கு, அவர்கள் பயணித்த படகு உரிய தரத்துடன் இல்லாமையும், குறித்த மாணவர்கள் மதுபோதையில் இருந்தமையுமே காரணம் என்று பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இதேவேளை, படகில் ஏறி கடலில் பயணித்த 7 மாணவர்களில் ஒரு மாணவர் மாத்திரம் நீந்திக் கரை சேர்ந்துள்ளார். ஏனைய 6 மாணவர்களும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
இச் சம்பவம் நேற்று திங்கட்கிழமை பிற்பகல் 1.30 மணியளவில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.