காணாமலாக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தையொட்டி இன்று யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு நிகழ்வு இடம்பெற்றது. இதில் வடக்கின் அனைத்து மாவட்டங்களிலுள்ள மக்களும் வந்து கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான இன்று புதன்கிழமை கிளிநொச்சி மாவட்டத்திலும் பேரணியுடன் கூடிய கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
காணாமல் ஆக்கப்பட்டோரை மீட்டுத்தருமாறு வலியுறுத்தி தொடர் போராட்டம் இன்றுடன் நூற்றி தொண்ணூற்றிஇரண்டாவது நாளாக இடம்பெற்றுவரும் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் ஆரம்பமான கவனயீர்ப்பு போராட்டம் ஊர்வலமாக கிளிநொச்சி மாவட்ட செயலகம் வரை மேற்கொள்ளப்பட்டது.
மாவட்ட செயலகத்தைச் சென்றடைந்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் மாவட்ட செலக முன்றலில் ஒன்றுகூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காணாமல் ஆக்கப்பட்டுள்ளோரின் உறவினர்கள், தமது உறவுகள் தொடர்பில் தீர்க்கமான பதில் வழங்கப்பட வேண்டும் ஜனாதிபதியின் வாக்குறுதியும் பொய்யானது என்று பல்வேறு பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இப் போராட்டத்தில் காணமல் போனவர்களின் உறவினர்கள் சமூக ஆர்வலர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் முன்னாள் வட மாகாண கல்வியமைச்சர் குருகுலராஜா எனப் பலரும் கலந்து கொண்டனர்.
வலிந்து காணாமலாக்கப்படடோருக்கான சர்வதேசதினம் இன்று 30 ஆம் திகதி புதன்கிழமை காலை 10.30 மணியளவில் மட்டக்களப்பு காந்திபூங்காவிற்கு அருகாமையில் அனுஷ்டிக்கப்பட்டது.
இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் இன்று மட்டக்களப்பில் ஒன்று கூடி இந்த சர்வதேச தினத்தை அனுஷ்டித்தனர்.
பல மாதங்கள்ளாக, இலங்கையின் வடக்கிலும் கிழக்கிலும் உள்ள ஐந்து கிராமங்களில் நூற்றுக்கணக்கான தமிழ் பெண்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்காக எதிர்ப்பு போராட்டங்களில் ஈடுபட்டு தங்களது உறவுகளுக்காக குரல் கொடுத்து வருகின்றனர்.
அவர்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் எங்கு மறைத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பது பற்றிய பதில்களை பெறுவதே அவர்களின் கோரிக்கையாக முன்வைத்துள்ளனர்.
இன்றைய நிகழ்வில் இலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், சிவில் சமூக அமைப்புகள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான இன்று புதன்கிழமை முல்லைத்தீவில் இன்றுடன் 176 நாட்களாக போராடிவரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு பிரதான பஸ் நிலையத்திலிருந்து ஆரம்பான குறித்த ஆர்ப்பாட்டம் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் முன்னெடுக்கபட்டுவரும் போராட்டம் இடம்பெறும் பகுதியில் நிறைவடைந்தது. “தடுப்பில் உள்ள எங்களது பிள்ளைகளை தா” காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதியை வழங்கு”, இராணுவத்திடம் கையளிக்கப்பட்ட எமது பிள்ளைகள் எங்கே’ போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை தாங்கியவாறு ஆர்ப்பாட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஈடுபட்டனர்.
இந்த ஆர்பாட்டத்தில் வடக்கு மாகாண விவசாய அமைச்சர் சிவநேசன் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களான ரவிகரன், புவனேஸ்வரன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்