ரொரன்ரோ நகர நிர்வாகத்தின் தலைமை திட்டமிடல் அதிகாரியும், மிகவும் வெளிப்படையாக கருத்துக்களை முன்வைத்து வருபவருமான ஜெனீஃபர் கீஸ்மத் தனது பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
ஐந்து ஆண்டுகளாக குறித்த அந்த பதவியில் இருந்துவந்த அவர், இன்று 29ஆம் திகதியுடன் தனது அந்த பொறுப்புக்களை விட்டு விலகுவதாக கூறப்படுகிறது.
தனது இந்த பதவி விலகல் குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், நகரபிதா ஜோன் ரொறி, நகரமன்ற உறுப்பினர்கள் மற்றும் நகர பணியாளர்களுடன் பணியாற்றியதை தான் மிகவும் பெருமையாக கருதுவதாகவும், கடந்த ஐந்து ஆண்டுகளாக நகரின் திட்டமிடல் பிரிவில் கடமையாற்றியமை தனது வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க விடயம் எனவும் தெரிவித்துள்ளார்.
நேற்று மாலை நகர நிர்வாகம் ஊடாக வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ செய்திக் குறிப்பில் இதனைத் தெரிவித்துள்ள அவர், ஐந்து ஆண்டுகளாக வகித்துவந்த இந்த பதவியில் இருந்து தற்போது விலகுகின்ற போதிலும், இந்த காலப்பகுதியில் நகர திட்டமிடலில் தான் கற்றுக்கொண்ட பாடங்கள் தனக்கு மிகவும் பலனுள்ளவை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ரொரன்ரோ டவுன்ரவுன் மேம்பாடு உட்பட, கிங் வீதி பரீட்சார்த்த மேம்பாட்டுத் திட்டம், ஸ்காபரோ தொடரூநு்து விரிவாக்க திட்டம், SmartTrack, டவுன்ரவுன் போக்குவரத்து நெருக்கடி நீக்க திட்டம், waterfront LRT மற்றும் Eglinton Crosstown LRT உள்ளிட்ட திட்டங்களையும் இவரே தயாரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை இவரது பதவி விலகல் குறித்து கருத்து வெளியிட்டுள்ள நகரபிதா ஜோன் ரொறி, ரொரன்ரோ நகர மேம்பாட்டுக்காக ஜெனீஃபர் வழங்கியுள்ள தலைமைத்துவம், புத்தாக்கம், அர்ப்பணிப்பு உள்ளிட்டவற்றுக்கு தனிப்பட்ட ரீதியில் தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார்.