சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜெகத் ஜயசூரியவுக்கு எதிராக பிரேசிலில் தொடரப்பட்டுள்ள போர்க்குற்ற வழக்கு தொடர்பான விவகாரத்தை உன்னிப்பாக கவனிக்குமாறு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தாம் உத்தரவிடப் போவதாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று ஊடகங்களின் ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் நடத்திய சந்திப்பின் போதே, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இந்த தகவலை வெளியிட்டார்.
இந்தச் சந்திப்பின் போது, பிரேசிலுக்கான தூதுவராக பணியாற்றிய ஜெனரல் ஜெகத் ஜயசூரியவுக்கு எதிராக பிரேசிலியாவில் தொடரப்பட்டுள்ள போர்க்குற்ற வழக்குத் தொடர்பாக, சிறிலங்கா அதிபரிடம் கேள்விகள் எழுப்பப்பட்டன.
அதற்குப் பதிலளித்த அவர், போர்க்குற்ற வழக்கை எதிர்கொள்வதில் இருந்து தப்பிப்பதற்காக ஜெனரல் ஜெயசூரிய, பிரேசிலில் இருந்து நாடு திரும்பவில்லை. பிரேசிலில் தூதுவராகப் பணியாற்றிய அவரது பதவிக்காலம் முடிந்து விட்டது. எனவே அவர் நாடு திரும்பினார்.
எனினும், இந்த விவகாரத்தை உன்னிப்பாக கவனிக்குமாறு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தாம் கேட்டுக் கொள்ளப் போவதாக தெரிவித்தார்.