ஜீவசமாதி அடைய அனுமதிக்கக்கோரி வேலூர் சிறையில் உண்ணாவிரதம் இருக்கும் முருகன் பதினொரு நாட்களாக எதுவும் சாப்பிடவில்லை என்று தமிழக சிறைத்துறை உயர் நீத்மன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. மேலும், முருகன் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் அவரை வேலுர் அரசு மருத்துவமனைக்கு மாற்றுமாறும் சிறை மருத்துவ குழு பரிந்துரை செய்துள்ளது.
இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை வழங்கபட்டு, கடந்த 26 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் முருகன், ஜீவ சமாதி அடைய போவதாக அறிவித்து வேலூர் சிறையில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இந்நிலையில், தஞ்சாவூரைச் சேர்ந்தவரும் முருகனின் உறவினருமான தேன்மொழி என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், “முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகன், ஜீவசமாதி அடைய போவதாக ஆகஸ்ட் 18 ஆம் தேதி முதல் உணவு உண்ணாமலும், யாரிடமும் பேசாமலும் தியானத்தில் இருந்து வருகிறார். இதனால் அவருக்கு அளிக்கப்பட்ட சிறை சலுகைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. வேலூர் சிறையில் இருக்கும் முருகனை பார்க்க சென்றபோது, சிறை அதிகாரிகள் அனுமதி மறுத்துள்ளனர்.
சிறை உணவை எடுத்துக் கொள்ளாதவர்களுக்கு அவர்களுக்கான சலுகைகள் நிறுத்தப்படுவதன் அடிப்படையில், பார்வையார்களை சந்திக்க அனுமதிக்க முடியாது என சிறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதனையடுத்து முருகனை சந்திக்க அனுமதியளிக்க தமிழக அரசுக்கும், சிறைத்துறைக்கும் உத்தரவிட வேண்டும். உணவு உட்கொள்ளாமல் இருப்பதால் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, முருகனின் உயிரை காப்பாற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கை நேற்று (ஆகஸ்ட் 29) விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஏ. செல்வம் பொன்.கலையரசன் ஆகியோர் அடங்கிய அமர்வு, முருகன் மருத்துவ அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.
இதையடுத்து, வேலுர் சிறை நிர்வாகம் சார்பில் மருத்துவ அறிக்கை தாக்கல் இன்று (ஆகஸ்ட் 30) செய்யப்பட்டது. அதில், கடந்த 11 நாட்களாக முருகன் உணவு அருந்தவில்லை எனவும், தண்ணீர் மட்டுமே அருந்துவதாகவும் அவரது உடல் நிலை மோசமாக இருப்பதால், வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்க வேண்டும் என சிறை மருத்துவக் குழு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.