சென்னை மெரினாவில் உள்ள தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில், மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்கான அகில இந்திய நுழைவுத் தேர்வுக்கு (நீட்) எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களைக் காவல்துறையினர் வலுக்கட்டாயமாக வெளியேற்றினர்.
தமிழகத்தில், மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்கான அகில இந்திய நுழைவுத் தேர்வு அடிப்படையில் கலந்தாய்வு நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த அரியலூர் மாணவி அனிதா கடந்த 1-ம் தேதி தற்கொலை செய்துகொண்டார். அதைத் தொடர்ந்து மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்கான அகில இந்திய நுழைவுத் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு நிரந்தர விலக்கு அளிக்க வேண்டும், மாணவி அனிதாவின் மரணத்துக்கு நியாயம் வேண்டும் எனக் கோரி தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டங்கள் நடந்து வருகின்றன. நான்காவது நாளான இன்று தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், சென்னை மெரினாவில் உள்ள தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில், மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்கான அகில இந்திய நுழைவுத் தேர்வுக்கு (நீட்) எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களைக் காவல்துறையினர் வலுக்கட்டாயமாக வெளியேற்றினர்.
இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கூறும்போது, ’’மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்கான அகில இந்திய நுழைவுத் தேர்வை நிச்சயம் அனுமதிக்க மாட்டேன் என்று அதனைக் கடுமையாக எதிர்த்தவர் ஜெயலலிதா. அதனால்தான் அவரின் நினைவிடத்தில் போராட்டத்தைத் தொடங்கி இருக்கிறோம். ஆனால், காவல்துறையினர் எங்களை வலுக்கட்டாயமாக வெளியேற்ற முயற்சிக்கின்றனர். மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்கான அகில இந்திய நுழைவுத் தேர்வுக்கு நிரந்தரமாக விலக்கு கிடைக்கும் வரையில் எங்களுடைய போராட்டம் தொடரும்’’ என்று தெரிவித்துள்ளனர்.
ஜெயலலிதா நினைவிடத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளைப் பெண் காவலர்கள் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தியபோது ஒரு மாணவி மயங்கி விழுந்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
ஜல்லிக்கட்டு போராட்டத்துக்குப் பின்னர், மெரினாவில் போராடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த நான்கு நாட்களும் மாணவர்கள் மெரினாவில் குவிவதை தடுக்க பலுத்த காவல்துறைப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதைமீறி மெரினாவில் ஜெயலலிதா நினைவிடத்தில் மாணவர்கள் குவிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.