தமிழக முதல்வருடன் அரசு பள்ளி ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் ஆகியோரை உள்ளடக்கிய ஜாக்டோ – ஜியோ கூட்டமைப்பு நடந்த இறுதி பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனால், திட்டமிட்டபடி தமிழகத்தில் ஜாக்டோ-ஜியோ தொடர் வேலை நிறுத்தம் நாளை முதல் ஆரம்பிக்கிறது. இதன் காரணமாக தமிழக பள்ளிகள், அரசு அலுவலகங்கள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழக அரசு பள்ளி ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் ஆகியோரை உள்ளடக்கிய ஜாக்டோ – ஜியோ கூட்டமைப்பு தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறது. பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், 8-ஆவது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும், ஊதியக்குழு பரிந்துரைகளை அமுல் செய்யும் வரை இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்து வருகிறார்கள். இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், மீன்வளம் மற்றும் நிர்வாக சீர்திருத்ததுறை அமைச்சர் ஜெயகுமார், வருவாய்த் துறை அமைச்சர் உதயகுமார் ஆகியோர் ஜாக்டோ – ஜியோ நிர்வாகிகளை சந்தித்துப் பேசினர். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.
இதைத் தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்ட அறிக்கையில், “பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்துவது குறித்து, ஓய்வு பெற்ற இந்திய ஆட்சிப் பணி (ஐ.ஏ.எஸ்.) அதிகாரி ஸ்ரீதர் தலைமையில் குழு திருத்தியமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் அறிக்கை வரும் நவம்பர் மாத இறுதிக்குள் அளிக்கப்படவுள்ளது. அந்த அறிக்கையின் அடிப்படையில் அரசு உரிய முடிவுகளை எடுக்கும்” என்று தெரிவிக்கப்பட்டது.
மேலும், “ஊதிய விகிதம் திருத்தியமைப்பது, இடைக்கால நிவாரணம் வழங்குவது, காலமுறை ஊதியத்திற்குப் பதில் முறையான காலமுறை ஊதியம் வழங்குதல் போன்ற கோரிக்கைகள் குறித்து, இதற்கென அமைக்கப்பட்ட ஊதியக் குழு பரிசீலித்து வருகிறது. அக்குழு இம்மாத இறுதிக்குள் அறிக்கையை சமர்ப்பிக்கும். அந்த அறிக்கையின் அடிப்படையில் அரசு உரிய முடிவுகளை எடுக்கும். அவசியம் ஏற்படும் நிலையில் இடைக்கால நிவாரணம் குறித்த அறிவிப்பை உரிய நேரத்தில் அரசு வெளியிடும்.
இந்த அரசு, ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் கோரிக்கையை கனிவோடு பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கும். எனவே, பொதுமக்களின் நலன் கருதி, ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு தற்போது அறிவித்துள்ள காலவரையற்ற போராட்டத்தை கைவிட்டு, மக்கள் பணியை தொடர்ந்து ஆற்ற வேண்டுமென நான் கேட்டுக் கொள்கிறேன்” என கேட்டுக் கொண்டார்.
ஆனால் ஜாக்டோ – ஜியோ நிர்வாகிகள் இதை ஏற்கவில்லை. இன்று (செப்டம்பர் 6) ஈரோட்டில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் பங்கேற்க வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமியை கடைசி முயற்சியாக ஜாக்டோ – ஜியோ அமைப்பினர் சந்தித்து பேசினர். அப்போது, முன் தினம் அறிக்கையில் குறிப்பிட்ட அதே வாக்குறுதியை மீண்டும் கூறினார் எடப்பாடி பழனிசாமி என்று கூறப்படுகிறது. இதை ஏற்க மறுத்து, நாளை (செப்டம்பர் 7) முதல் தொடர் வேலை நிறுத்தம் நடத்தப் போவதாக ஜாக்டோ – ஜியோ அறிவித்துள்ளது.
செப்டம்பர் 7-ம் தேதி வட்ட தலைநகரங்களிலும், செப்டம்பர் 8-ம் தேதி மாவட்ட தலைநகரங்களிலும் வேலையை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் செய்ய இருக்கிறார்கள். அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து செப்டம்பர் 10-ம் தேதி கூடிப் பேசி அறிவிப்பது என்றும் ஜாக்டோ – ஜியோ அமைப்பினர் முடிவு செய்திருக்கிறார்கள்.
கடந்த ஆகஸ்ட் 22-ம் தேதி தமிழ்நாடு முழுவதும் ஒருநாள் வேலை நிறுத்தம் செய்து, சென்னையில் ஜாக்டோ – ஜியோ சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதில் பெருமளவில் அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் கலந்துகொண்டனர். தமிழ்நாடு முழுக்க அன்று பள்ளிகளும் அரசு அலுவலகங்களும் முடங்கின. அதேபோல செப்டம்பர் 7 முதல் தொடர் வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருப்பதால், தமிழகம் முழுவதும் பள்ளிகள், அரசு அலுவலகங்கள் முடங்கும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது.