தமிழக மாணவர்கள் போராட்டத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், “எந்தவொரு போராட்டத்தையும் அனுமதிக்க முடியாது” என்று தீர்ப்பளித்தது. இதனடிப்படையில், சென்னையில் போராட்டங்களுக்கு காவல்துறை தடை விதித்துள்ள நிலையில், “மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்கான அகில இந்திய நுழைவுத் தேர்வுக்கு எதிராக போராட்டம் நடத்த தடை இல்லை. அமைதியான முறையில் போராட்டம் நடத்தலாம்” என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
தமிழகத்தில் மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்கான அகில இந்திய நுழைவுத் தேர்வுக்கு எதிரான போராட்டங்களை அனுமதிக்கக் கூடாது என்று, உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஜி.எஸ். மணி பொதுநல வழக்கு தொடர்ந்தார். இம்மனு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் அடங்கிய அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், “மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்கான அகில இந்திய நுழைவுத் தேர்வு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், அதை எதிர்த்து அரசியல் கட்சிகள், தனி நபர்கள் போராட்டம் நடத்துவதை ஏற்க முடியாது. மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்கான அகில இந்திய நுழைவுத் தேர்வுக்கு எதிரான போராட்டம், ஆர்ப்பாட்டம், போக்குவரத்துக்கு தடைகள் ஏற்படுத்துவது, பொதுமக்களின் அன்றாட வாழ்க்கைக்கு இடையூறு ஏற்படுத்துதல் ஆகியவை நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும். எனவே, மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்கான அகில இந்திய நுழைவுத் தீர்ப்புக்கு எதிரான போராட்டங்களுக்கு தடை விதிக்கிறோம். சட்டம் ஒழுங்கை பாதுகாக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தீர்ப்பளித்து, வழக்கை வரும் 18-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
இதனடிப்படையில், சென்னையில் போராட்டம் நடத்த காவல்துறை தடை விதித்தது. மீறுபவர்கள் கைது செய்யப்படுவார்கள் எனவும் அறிவித்தது.
அதுபோல், திமுக தலைமையில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கலந்துகொள்ளும் மாபெரும் பொதுக்கூட்டம் திருச்சியில் நடைபெற அனுமதி வழங்கிய காவல்துறை, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி பொதுக்கூட்டம் நடத்துவதற்கான அனுமதி ரத்து செய்யப்படுகிறது என்று தெரிவித்தது.
இந்நிலையில், இதுகுறித்துப் பேசிய திமுக செயல் தலைவர் ஸ்டாலின், ”உச்ச நீதிமன்றம் பொதுக்கூட்டத்துக்கு தடை போடவில்லை. அதனால் பொதுக்கூட்டம் திட்டமிட்டபடி நடைபெறும்” என்றார். திட்டமிட்டபடி திருச்சியில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் அரியலூர் மாணவி அனிதா மரணத்துக்கு காரணமான மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும், மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்கான அகில இந்திய நுழைவுத் தேர்விலிருந்து தமிழகத்துக்கு நிரந்தர விலக்கு அளிக்கவும், கல்வியை மாநிலப் பட்டியலில் சேர்க்கவும் உரிய சட்டத் திருத்தங்களை செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் பொதுக்கூட்டம் நடத்தினர்.
இதனிடையே இணையத்தில் வெளியான உச்ச நீதிமன்ற தீர்ப்பில் மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்கான அகில இந்திய நுழைவுத் எதிர்ப்பு போராட்டம் நடத்த தடை இல்லை என்று நீதிபதிகள் விளக்கம் அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அளித்த தீர்ப்பில், ”மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்கான அகில இந்திய நுழைவுத் எதிர்ப்பு போராட்டம் நடத்த தடை இல்லை. கடையடைப்பு அல்லது போராட்டம் மூலம் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாத வகையில் போராடலாம். சட்டம், ஒழுங்கு பாதிக்காத வகையில் அமைதியான வழியில் போராட்டம் நடத்தலாம். அமைதி வழியில் போராட ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உள்ளது. சட்டம், ஒழுங்கு பாதித்தால் தமிழக தலைமைச் செயலாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.