மொன்றியலின் தென்கிழக்கு பகுதியில் வசிக்கும் ஆயிரக்கணக்கான குடியிருப்பாளர்களுக்கான வினியோக நீரில் “ஈ-கோலி” கிருமி காணப்பட்டதனை அடுத்து, அப்பகுதி மக்களை நீரை கொதிக்க வைத்து குடிக்குமாறான எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அங்குள்ள நீர் வினியோக கட்டமைப்பில் இருந்து பெற்றக்கொள்ளப்பட்ட இரண்டு மாதிரிகளினும் ஈ-கோலி தொற்று காணப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதை அடுத்தே, லோங்குவில் நகர நிர்வாகம் இந்த எச்சரிக்கையை பிறப்பித்துள்ளது.
குறித்த அந்த பகுதிகளைச் சேர்ந்த குடியிருப்பாளர்கள், தமக்கான நீரை அருந்துவதற்கு குறைந்தது ஒரு நிமிடத்திற்கு முன்னர் அதனை கொதிக்கவைத்து அருந்துமாறு அதிகாரிகள் அறிவுறுத்தல் விடுத்துள்ளனர்.
இதுவேளை நீர்க் குளாய்களில் இருந்து நேரடியாக வரும் சுடுநீரை பாத்திரங்கள் கழுவுவதற்கும், குளியல் அறை – கழிவறை பாவனைகளுக்கும், உடைகளைத் துவைப்பதற்கும் நேரடியாக பயன்படுத்த முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த நிலைமை சீரடைந்தமை உறுதிப்படுத்தப்படும் வரையில் இந்த எச்சரிக்கை நடப்பில் இருக்கும் எனவும், மறு அறிவித்தல் விடுக்ப்படும் வரையில் இதனை கடைப்பிடிக்குமாறும் அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.