குண்டர் சட்டத்தில் கைதாகி விடுதலையான சேலம் மாணவி வளர்மதி, “வழக்குகளும் சிறையும் எனது போராட்டங்களை முடக்கிவிடாது. நீட் உள்ளிட்ட மக்களைப் பாதிக்கும் பிரச்சினைகளுக்கு எதிராகவும் தொடர்ந்து போராடுவேன்” என்று கூறினார்.
சேலம் பெரியார் பல்கலைக்கழத்தின் இதழியல் மாணவியும் தமிழ்நாடு பொதுநல மாணவர் எழுச்சி இயக்கத்தின் சேலம் மாவட்டப் பொறுப்பாளருமான வளர்மதி, நெடுவாசல் மற்றும் கதிராமங்கலம் போராட்டங்களுக்கு ஆதரவாக துண்டுப் பிரசுரம் விநியோகம் செய்து, மக்களைப் போராட்டத்துக்கு தூண்டியதாக கைது செய்யப்பட்டார். இதனையடுத்து சில நாட்களில், வளர்மதியை குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்ய சேலம் மாநகர காவல் ஆணையர் கடந்த ஜூலை 17-ம் தேதி உத்தரவிட்டார். இதனால், கோவை மத்திய சிறையில் வளர்மதி அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், வளர்மதி மீதான குண்டர் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி, வளர்மதியின் தந்தை சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். மாணவர் வளர்மதி மீதான வழக்கில் எந்த சட்ட விதிமுறைகளையும் காவல்துறையினர் பின்பற்றவில்லை என்று கூறி, அவரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து பிறப்பித்த உத்தரவை நீதிமன்றம் ரத்து செய்தது. இதையடுத்து, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த வளர்மதி நேற்று மாலையில் விடுவிக்கப்பட்டார்.
சிறை வாயிலில் செய்தியாளர்களிடம் பேசிய வளர்மதி, “மாணவி அனிதா தற்கொலை செய்துகொள்ளவில்லை. மத்திய, மாநில அரசுகளால் படுகொலை செய்யப்பட்டுவிட்டார். இனி ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒரு மாணவர்கூட இதுபோன்ற முடிவை எடுக்காமல் இருப்பதற்காக தொடர்ந்து போராடுவோம்.
என் மீது வழக்குகள் பதிவு செய்வதாலோ, சிறையில் அடைப்பதாலோ எனது போராட்டத்தை முடக்கிவிட முடயாது. நீட் உள்ளிட்ட மக்களைப் பாதிக்கும் பிரச்சினைகளுக்கு எதிராகவும், சமூக அநீதிகளுக்கு எதிராகவும் தொடர்ந்து போராடுவேன்.
பெங்களூருவில் பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் சுட்டுக் கொல்லப்பட்டது கடும் கண்டனத்துக்குரியது. அடக்குமுறை எங்களை மேலும் வலிமையாக்குகிறது” என்று தெரிவித்தார்.