பல கரீபியன் தீவுகளைப் புரட்டிப் போட்ட அதிவேக இர்மா சூறாவளி தற்போது கியூபாவை கடக்கிறது; அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தை நெருங்குகிறது.
கியூபாவின் கேமகுவே தீவுக்கூட்டத்தில் கரையைக் கடக்கும் இர்மா அதிகபட்சமாக மணிக்கு 257 கி.மீ. வேகத்தில் வீசுகிறது.படத்தின் காப்புரிமைREUTERS
கடந்த சில மணி நேரத்தில் மேலும் வலிமை கூடியுள்ள இர்மா அதிகபட்சமாக மணிக்கு 257 கி.மீ. வேகத்தில் வீசுகிறது.
கியூபாவின் வட கிழக்குக் கரையை ஒட்டியுள்ள கேமாகுவே தீவுக்கூட்டத்தில் தற்போது கரை கடக்கிறது இச்சூறாவளி.
ஃப்ளோரிடாவில் அனைவரும் வேளியேறத் தயாராக வேண்டும்
அமெரிக்காவை நெருங்கிவரும் இர்மா, ஃப்ளோரிடா மாகாணத்தை தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், அந்த மாகாணத்தில் உள்ள 5.6 மில்லியன் மக்கள் தொகையில் 25 சதவீதம் பேர் தங்கள் இடங்களை விட்டுப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள்.
அதே நேரம், ஃப்ளோரிடாவில் உள்ள அனைவருமே வெளியேறவேண்டிய தேவை வரலாம் என்றும், அதற்குத் தயாராக இருக்கும்படியும் அம்மாகாண ஆளுநர் ரிக் ஸ்காட் தெரிவித்துள்ளார்.
இர்மா சூறாவளி நகரும் எனக் கணிக்கப்பட்டுள்ள பாதை.
Image caption
இர்மா சூறாவளி நகரும் எனக் கணிக்கப்பட்டுள்ள பாதை.
ஐந்தாம் எண் சூறாவளி
புவியின் மேற்குப் பகுதியில் வீசும் வெப்பமண்டல புயல்களை சூறாவளி (ஆங்கிலத்தில் ஹரிக்கேன்) என்று அழைப்பது வழக்கம்.
இத்தகைய சூறாவளிகளை அவற்றின் வேகத்தை ஒட்டி ஒன்று முதல் ஐந்து வரையிலான எண்களைக் கொண்டு வகைபிரிக்கிறார்கள்.
அவற்றில் அதிகபட்ச வேகம் உடைய சூறாவளிகளுக்கு ஐந்தாம் எண் தரப்படுகிறது.
தற்போது கரீபியன் தீவுகளை சூறையாடிவிட்டு, கியூபாவுக்கு நகர்ந்துள்ள இர்மா ஓர் ஐந்தாம் எண் சூறாவளி.
இந்தச் சூறாவளியால் கரீபியன் தீவுகளில் குறைந்தது 20 பேர் இறந்துள்ளனர்.
பல பத்தாண்டுகளில் கியூபாவை ஐந்தாம் எண் சூறாவளி தாக்குவது இதுவே முதல் முறை.
சூறாவளியின் ரகசியம் என்ன?
கிரீன்விச் நேரப்படி அதிகாலை 3 மணிக்கு இர்மாவின் அதிகபட்ச வேகம் 257 கி.மீ.யாக இருந்தது என அமெரிக்காவின் தேசிய சூறாவளி மையம் தெரிவித்துள்ளது.
கியூபாவின் கேமாகுவே, சீகோ டி அவிலா, சேங்டி ஸ்பிரிடஸ், வில்லா கிளாரா, மேடன்சாஸ் ஆகிய மாகாணங்களில் சூறாவளி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
50 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் வெளியேறினர்
“சில இடங்களில் மின்சாரம் தடைபட்டுள்ளது, சில தொலைதூர நகரங்களில் தொலைத்தொடர்பு பாதிக்கப்படுகிறது” என்கிறார் கியூபத் தலைநகர் ஹவானாவில் உள்ள பிபிசி செய்தியாளர் வில் கிராண்ட்.
தங்களை கொஞ்சம் எட்டிப் பார்த்துவிட்டு இந்தச் சூறாவளி ஃப்ளோரிடா நீரிணை வழியாக மியாமிக்குச் சென்றுவிடும் என்று கியூபாவில் மக்கள் நினைக்கிறார்கள். அப்படியே நடந்தாலும், மக்கள் நெருக்கம் நிறைந்த இடங்களில் அதிவேக காற்றும், திடீர் வெள்ளப்பெருக்கும் ஏற்பட வாய்ப்பிருப்பதாக அவர் கூறுகிறார்.
சுற்றுலாப் பயணிகளை மகிழ்வித்துவந்த டால்ஃபின்கள்கூட பாதுகாப்பான பகுதிகளுக்குக் கொண்டு செல்லப்பட்டன.படத்தின் காப்புரிமைEPA
Image caption
சுற்றுலாப் பயணிகளை மகிழ்வித்துவந்த டால்ஃபின்கள்கூட பாதுகாப்பான பகுதிகளுக்குக் கொண்டு செல்லப்பட்டன.
முன்னதாக தாழ்வான பகுதிகளில் இருந்தவர்கள் தங்கள் வீடுகளின் மேற்கூரைகளைப் பாதுகாக்கவும், தங்கள் உடமைகளை பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு செல்லவும் முயன்றனர்.
ஏறத்தாழ 50 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் கியூபாவில் இருந்து வெளியேறியுள்ளனர். வடக்குக் கரையோர சுற்றுலா விடுதிகள் தற்போது காலியாக இருக்கின்றன.
தென்கிழக்கு அமெரிக்கா முழுவதும்
அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தையோ, அருகில் உள்ள பிற மாகாணங்களையோ ஃபுளோரிடா நாசம் செய்யும் என்று அமெரிக்க அவசரகால முகமையின் தலைவர் பிராக் லாங் எச்சரித்துள்ளார்.
ஃப்ளோரிடாவிலும் அருகில் உள்ள பகுதிகளிலும் சில நாள்களுக்கு மின்சாரம் இல்லாமல் போகும்; அமெரிக்க ஐக்கியத்தின் தென்கிழக்குப் பகுதி மொத்தமும் விழிப்புடன் இருப்பது நல்லது என்று அவர் கூறியுள்ளார்.
“நமக்குள்ள நேரம் குறைந்துகொண்டே போகிறது. வெளியேற வேண்டிய பகுதியில் இருந்தால் நீங்கள் இப்போதே வெளியேறவேண்டும். உங்கள் வீடுகளைத் திரும்பிக் கட்டித் தர முடியும். ஆனால், உங்கள் வாழ்க்கையை மீளக் கட்டித் தர முடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்” என்று அவர் கூறியுள்ளார்.
பார்புடாவில் 95 சதவீத கட்டடங்கள் சேதம்
ஏற்கெனவே கரீபியன் தீவுகளில் ஒன்றான பார்புடாவில் உள்ள 95 சதவீத கட்டடங்களும் இந்தச் சூறாவளியால் சேதமடைந்துவிட்டன. அந்தத் தீவில் குடியிருப்பதே சாத்தியமில்லாமல் போய்விட்டது.
தீவை மறு கட்டமைப்பு செய்ய 100 மில்லியன் அமெரிக்க டாலர் செலவு பிடிக்கும் என ஆன்டிகுவா-பார்புடா நாட்டின் பிரதமர் கேஸ்டன் பிரௌனி கூறியுள்ளார்.