வடகொரியாவுக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள ஐ.நாவின் பொருளாதாரத் தடையை, சிறிலங்கா உள்ளிட்ட சில நாடுகள் மீறியிருப்பதாக, ஐ.நா குற்றம்சாட்டியுள்ளது.
வடகொரியா மீது கடந்த ஆண்டு செப்ரெம்பர் 05ஆம் நாள் விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளைக் கண்காணிக்க நியமிக்கப்பட்ட ஐ.நாவின் ஏற்றுமதி கண்காணிப்பு நிபுணர்கள் ஐ.நாவுக்கு சமர்ப்பித்துள்ள அறிக்கையிலேயே இந்தக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டின் ஓகஸ்ட் மாத முற்பகுதியுடன் முடிந்த கடந்த ஆறு மாதகாலத்தில், சிறிலங்கா, சீனா, இந்தியா, மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு, ஐ.நாவின் தடைகளை மீறி வடகொரியா, 270 மில்லியன் டொலர் பெறுமதியான, நிலக்கரி, இரும்பு மற்றும் பொருட்களை ஏற்றுமதி செய்துள்ளது.
ஐ.நாவின் தகவல்களின் படி, வடகொரியாவுக்கு எதிரான, தடைகளை மீறி, 11 நாடுகள், கடந்த ஆண்டு ஒக்ரோபர் தொடக்கம், இந்த ஆண்டு ஏப்ரல் வரையான காலத்தில், 44,344,912 டொலர் பெறுமதியான உருக்கு மற்றும் இரும்பை இறக்குமதி செய்துள்ளன.
சிறிலங்கா மாத்திரம், 1,860,516 டொலர் பெறுமதியான உருக்கு மற்றும் இரும்பு என்பனவற்றை வடகொரியாவில் இருந்து இந்தக் காலப்பகுதியில இறக்குமதி செய்துள்ளது.
வடகொரியாவின் கிம் ஜொங் உன் அரசாங்கம் ஐ.நாவின் ஆயுத தடை மற்றும் கப்பல் போக்குவரத்து, நிதி கட்டுப்பாடுகளை தொடர்ந்து மீறி வருவதாகவும், ஐ.நா நிபுணர்களின் 111 பக்க அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
வடகொரியாவில் இருந்து உருக்கு, இரும்பு போன்ற பொருட்களை இறக்குமதி செய்து, சிறிலங்கா, பார்படோஸ், சீனா, கோஸ்டாரிக்கா, பிரான்ஸ், எல்சால்வடோர், இந்தியா, இந்தோனேசியா, அயர்லாந்து, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் மீறியிருப்பதாகவும் ஐ.நா அறிக்கை கூறியுள்ளது.
வடகொரியாவிடம் இருந்து சிறிலங்கா கடந்த ஆண்டு ஒக்ரோபர், நொவம்பர், டிசெம்பர் மாதங்களிலும், இந்த ஆண்டு ஜனவரி, பெப்ரவரி, மார்ச் மாதங்களிலும், உருக்கை இறக்குமதி செய்துள்ளது.
இதைவிட, இந்த ஆண்டு ஜனவரி, பெப்ரவரி மாதங்களில், சட்டவிரோதமாக வடகொரியாவிடம் இருந்து, சிறிலங்கா 32,184 டொலர் பெறுமதியான, செம்பையும் இறக்குமதி செய்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இதைவிட, வடகொரியாவுக்காக கடற்படைக் கப்பல்களை நவீனப்படுத்தும், கிறீன் பைன் என்ற நிறுவனத்தின் இரண்டு பிரதிநிதிகள், சிறிலங்கா வந்த கப்பல்களை விற்க முயற்சித்ததாகவும், இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அங்கோலாவில் கடற்படைக் கப்பல்களை நவீனமயப்படுத்துவதும் ஐ.நாவின் தடைகளை மீறும் செயல் என்று ஐ.நா அறிக்கை கூறியுள்ளது.