மியன்மாரில் றொகிஞ்சா முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்றுவரும் வன்முறைகள் குறித்து வருத்தம் வெளியிட்டுள்ள பிரதமர் ஜஸ்டின் ரூடோ, இவற்றுக்கு விரைவில் முடிவுகட்டுமாறு மியன்மாரின் நடைமுறைத் தலைவர் ஆங் சான் சூ கீயிடம் வலியுறுத்தியுள்ளார்.
ஆங் சான் சூ கீயை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு வரையாடும் போதே அவரிடம் இதனை பிரதமர் வலியுறுத்தியுள்ளதாக பிரதமரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மியன்மாரின் ராக்கீன் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள பாரதூரமான நிலைமை மற்றும் அங்குள்ள முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மை மக்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து தனது ஆழந்த வருத்தத்தை தெரிவித்துள்ள பிரதமர் ஜஸ்டின் ரூடோ, இந்த விடயத்தில தார்மீக அடிப்படையிலும் ஒரு சிறந்த அரசியல் தலைவராகவும் செயற்படுமாறு ஆங் சான் சூ கீயிடம் வலியுறுத்தியுள்ளார்.
அந்த வகையில அங்கு இடம்பெறும் வன்முறைகளை நிறுத்துவதற்கும், அமைதியை ஏற்படுத்துவதற்கும், பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்கும் மியான்மாரின் இராணுவமும் மக்கள் தலைவர்களும் தீர்க்கமான நிலைப்பாட்டினை எடுக்க வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அத்துடன் ஐக்கிய நாடுகள் உள்ளிட்ட அனைத்துலக மனிதாபிமான உதவி நிறுவனங்கள் தடையின்றி அங்கு செல்வதற்கும், அந்த மக்களுக்கு தேவையான மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கும் வழிவகைகள் செய்து கொடுகப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் அனைத்து இன மக்களையும் மதிக்கும் வகையில், மியான்மாரில் உள்ள சமூகங்களிடையே அமைதியையும் சமாதானத்தையும் கட்டி எழுப்புவத்றகு தேவையான உதவிகளை வழங்க கனடா தயாராக உள்ளதாகவும் பிரதமர் தனது இந்த கலந்துரையாடலின்போது குறிப்பிட்டுள்ளார்.
மியன்மாரின் ராக்கீன் மாநிலத்தில் இடம்பெற்றுவரும் வன்முறைகள் காரணமாக அங்கிருந்து இதுவரை சுமார் 3,80,000 றொகிஞ்சா இன மக்கள் அண்டை நாடான வங்காளதேசத்துக்கு அகதிகளாக தப்பிச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான நிலையில் குறித்த அந்த ராக்கீன் மாநிலத்திற்கான உதவி நிவாரண நடவடிக்கைகளுக்காக கனடிய அரசாங்கம் ஒரு மில்லியன் டொலர் மனிதாபிமான உதவிகளை அறிவித்துள்ளது.